ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

நாமக்கல் போற்றும் தமிழ்





நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் கவிதைகள் மென்மையும், அகிம்சை உணர்வும் காந்திய மதிப்பும் கொண்டவை. கவிதை என்றால் என்ன என்ற கேள்வியைத் தலைப்பாக அமைத்து அவர் ஒரு கவிதையைப் பாடியுள்ளார். கவிதைக்கான இலக்கணத்தைக் கவிதையிலேயே தருகின்றார்.

"அசதியைக் கிள்ளி அறிவைக் கிளப்பி
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி
இல்லாத ஒன்றையும் இருப்பது போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
…. பாடு படாமல் பாடம் பண்ணவும்
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை எனப்படும்"

என்பது நாமக்கலாரின் கவிதைக்கான இலக்கணம் ஆகும். பாடு படாமல் மனதில் நிலைத்து நிற்பது கவிதை. அசதியைத் தள்ளி அறிவைக் கிளப்பி நிற்பது கவிதை. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி நிற்பது கவிதை.


கவிதைக்கான நோக்கம் என்ன என்று கேட்டால் அதற்கும் இக்கவிதை பதில் தருகிறது. "அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்” என்று கவிதையின் நோக்கத்தைச் சொல்கிறது.

கதையோ பாட்டோ கற்பனை இல்லையென்றால் கணக்காகும் கவிதையாகாது. கற்பனை மிகுந்த கவிதைகள் அதிகம் கொண்டது தமிழ் மொழி என்று கவிப்பெருமை பேசுகிறார் கவிஞர்.

இவர் பாரதியாரை நேரில் சந்தித்தவர். பாரதியாரை நண்பர்களுடன் இவர் ஒருமுறை சந்திக்கிறார். அது மங்கலான மாலை நேரம். பாரதியின் வடிவம் ஒரு நிழல் போலக் கவிஞருக்குத் தெரிந்தது. இவரை ஓவியர் என்றும் கவிஞர் என்றும் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றனர். அப்போது பாரதியார் ஓவியப்புலவர், காவியப் புலவர் என்று இவரைப் புகழ்கிறார். பின்பு பாரதியார் இவரை ஒரு கவிதை பாடச் சொல்கிறார். இவர் மென்மையான குரலில் பாடுகிறார். இதனைக் கேட்ட பாரதியார் "பலே! பாண்டியா! நல்ல கவிதை” என்று பாராட்டியுள்ளார். கவிஞர் பாரதியாரிடம் தாங்கள் ஒரு பாடலைப் பாடிக்காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்குப் பாரதியார் "ஆர்டருக்கு எல்லாம் பாடல் வராது” என்று சொல்லியுள்ளார். அதாவது ஆணைக்கு இணங்கி பாடல் பிறக்காது என்று சொல்லி விட்டு அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணிக்கு நாமக்கல் கவிஞர் உறங்கும் இடத்திற்கு வந்து அவரை மட்டும் எழுப்பி அதிகாலைக் கவிதை பாடிக்காட்டுகிறார். அதிகாலை ஆறுமணி வரை இந்தப் பாட்டுப் பிரவாகம் பாய்ந்துள்ளது. ஆணைக்கு இணங்காத கவிஞர் அன்புக்கு இணங்குகிறார். இந்த மகாகவியின் சந்திப்பு பெருத்த மகிழ்வை நாமக்கல் கவிஞருக்குத் தருகிறது.

பாரதியை அவர் நினைந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.

"சுத்த வீர வாழ்வு சொல்லித்தந்த நாவலன்
சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்தி செல்லச் சாலை கண்ட சாரதி
சத்தியத்தில் பற்றுக் கொண்ட சுப்பிரமணிய பாரதி"

என்ற அவரின் பாரதி பாட்டு பாரதியை அவர் தரசித்த பொலிவைக்காட்டும்.

நாமக்கல் கவிஞர் தமிழின் மீதும் தமிழர் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தவர். அவரின் பாடல்களில் அவை வெளிப்பட்டு நிற்கின்றன.

"அன்பு நிறைந்தவள் தமிழன்னை
அருளை அறிந்தவள் தமிழன்னை
இன்பக் கலைகள் யாவையுமே
ஈன்று வளர்த்திடும் தேவியவள்"

என்று தமிழைத் தமிழன்னையாக உருவகம் செய்துப் போற்றுகிறார்.

மேலும் தமிழ்மொழியைப் பற்றி;

"பக்தி நிறைந்தது தமிழ் மொழியே
பரமனைத் தொடர்வது தமிழ் மொழியே
சக்தி கொடுப்பவள் தமிழ்த்தாயே
சமரசம் உடையவள் தமிழ்த்தாயே"

என்று பாடுகிறார்.

"மாநிலம் முழுவதும் ஓர் சமுதாயம்
மக்களுக்கெல்லாம் ஒருநியாயம்
தானென அறிஞர்கள் தலைவணங்கும்
தருமம் வளர்த்தவள் தமிழணங்கே "

என்று தமிழரின் பண்பாட்டினையும் பாடுகிறார் நாமக்கல்லார்.

தமிழ் வளரவும் வழி காணுகின்றார் நாமக்கல்லார்.

" புதுப்புது கவியும் புகழ் பெரு நூல்களும்
விதம்விதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியாசனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே”

தமிழைப் பிறநாட்டவரும் போற்றும் மொழியாக, இலக்கியங்கள் கொண்டதாக உயர்த்த வேண்டும் என்பது நாமக்கல்லாரின் சிந்தனை.

உலக இலக்கிய வரிசையில், உலக மொழிகளின் வரிசையில் அழியா தனித்த இடத்தைப் பெறச் செய்யும் நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்ற நாமக்கல் கவிஞரின் ஆர்வம் வெற்றி பெற உழைப்பது உலகத் தமிழரின் கடனாகும்

கருத்துகள் இல்லை: