வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

இலக்கியத்தின் பயன்






இலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும்? என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம்.

* இலக்கியத்தைப் படிப்பதனால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

* படிப்பவர் உள்ளம் பண்படுகிறது.

* நடுக்கம் நீங்கி அமைதி ஏற்படுகின்றது.

இவ்வாறு பதில்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு இலக்கியமும் மனிதனை உயர்வினை நோக்கி அழைத்துச் செல்லவேப் படைக்கப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. இலக்கியங்கள் அரியதானவற்றை அறிவிக்கின்றன. இலக்கியச் செல்வங்களை இன்று நூல்களின் வடிவில் தரிசிக்கிறோம். நூல்களைப் படிக்கும்போது அறிவு விரிவாகின்றது. நூல்களைத் திறக்கும்போது அறிவின் வாயில்களில் நாம் நிற்கிறோம். அவற்றை வி;ட்டுப் பிரிய மனமில்லாமல் பிரியும் போது நூல்களின் பக்கங்கள் நமக்காகக் காத்து நிற்கின்றன. திறக்கும் போது மகிழ்வையும், மூடும் போது நெகிழ்வையும் தருவன நூல்கள். நூல்கள், படிப்பு, பயன் என்று மனிதனைச் சுற்றி அறிவு என்னும் முழுவட்டம் அமைந்துவிடுகிறது.

இலக்கியத்தைப் படிப்பதனால் ஏற்படும் பயன்களை இலக்கணங்கள் பட்டியல் இடுகின்றன.

பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைத் தருவன இலக்கியங்கள் என்கிறது நன்னூல். அறம்,பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தருவது காப்பியங்களின் பயன் ஆகிறது. கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நாற்றாள் தொழுதல் என்கிறது வள்ளுவம். வீரசோழியம் என்ற நூல் இலக்கியத்தைப் படிப்பதனால் இருபதிற்கும் மேற்பட்ட பயன்கள் கிடைக்கின்றன என்கிறது.

தமிழின் ஐந்து இலக்கணங்களைப் பற்றி எழுதப்பெற்ற நூல் வீரசோழியம். இதனை எழுதியவர் புத்தமித்திரனார்.


எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் என்று ஐந்துவகை இலக்கணங்களைத் தன் காலத்திற்கு ஏற்ப வரையறுத்துநிற்கிறது வீரசோழியம் .

வீரசோழிய பொருளதிகாரத்தில் காதல், வீரம் ஆகிய இரு பாடுபொருள்களுக்கும் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. காதல் பாடல்கள் இருபத்தேழு கூறுகளை வெளிப்படுத்துவனவாக இருக்கவேண்டும் என்கிறார் வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரன்.

சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடன், கிளவி, கேள்வி, எச்சம், இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு என்று இருபத்தேழு நிலைகளுக்கு உடையதாக காதல் பாடல் பாடப்படவேண்டும்.

இந்த இலக்கண மரபின்படி ஒரு புலவன் காதல் பாடலை எழுதுவது என்பது எத்தனை கடினம். காதல் பாடல் எழுதுவது - மானிடருக்கு வரும் காதல் உணர்வினைக் காட்டிலும் கடினமானது என்பது மட்டும் இந்த இலக்கண வரம்பினைப் படிக்கும்போது தெரியவருகிறது. கண்ணிமைக்கும் நொடிக்குள் காதல் வந்துவிடும் என்ற அனுபவசாலிகள் பலர் இருக்கலாம். ஆனால் காதல் பாடலை எழுதுவது என்பது பல நொடிகளைச் செலவழித்து எழுத வேண்டியது என்பது மட்டும் உண்மை.

ஒரு காதல் பாடல் எழுதுவதற்குப் பல்வேறு இலக்கணக் கூறுகள் தேவைப்படுகின்றன. எம்மொழியிலும் இல்லாத அளவில் தமிழ் மொழியில் காதல் பாடல்கள் பாடுவதற்கான வரையறை வகுக்கப்பெற்றுள்ளது. காதல் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய இலக்கண நிலைகளில் ஒன்றுதான் பயன் என்பது. காதல் பாடலினால் என்ன என்ன பயன் விளைந்துவிட இயலும்.

இதற்குப் பதில் சொல்கிறது வீரசோழியம்.

“பயன் எனப்படுவது நயனுறக் கிளப்பின்
வழிபாடு, அன்பே, வாய்மை, வரைவே
விழையா நிலைமை, பெருமை, தலைமை
பொறையே போக்கே புணர்வே மயக்கே
நிறையே எச்சம் நேச நீர்மை
ஐயம் அகறல் ஆர்வம் குணமே
பையப் பகர்தல் பண்பே சீற்றம்
காப்பே வெறியே கட்டு நேர்தல்
பூப்பே, புலப்பே, புறையே புறைவியெனப்
பாற்பட இன்னவை பயத்தலாகும்”

காதல் பாடலினால் கிடைக்கும் பயனும் 27 என்கிறார் வீரசோழிய ஆசிரியர்.


காதல் பாடலினால் ஒருவரை ஒருவர் மதிக்கும் முறைமை கிடைக்கப் பெறுகிறது. உண்மை வெளிப்படுகிறது. திருமணம் கைகூடுகிறது. தலைவனின் பொருள் வேண்டாமல் அன்பு வேண்டும் நிலைமை வெளிப்படும். தலைவன் தலைவியின் பெருமை, தலைமைப் பண்பு, பொறுமை முதலிய குணங்ள் வெளிப்படும். தலைவன் தலைவியின் பிரிவு, இணைவு ஆகியவற்றை உணர்த்தும் நிலையில் பாடல்கள் அமையலாம். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மயக்கமும் வெளிப்படலாம்.

ஒருவரைப் பற்றிய முழுமையான குணங்கள், பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை முதலியன் வெளிப்படலாம். ஒருவர் மீது வைத்துள்ள சந்தேகம் தீரலாம். ஆர்வம், குணம், மெதுவாகப் பேசுதல், பண்பு, கோபம், காப்பு, அன்பின் மிகுதி, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கட்டுமானம், சிறு சண்டை, வெளிப்படல், வெளிப்பட்டு வாழ்தல், தன் வளர்ச்சியை வெளிப்படுத்தி நிற்றல், மீதமுள்ளவை போன்றன காதல் பாடல்களில் குறிப்பிடப்படவேண்டும் என்கிறது வீரசோழியம்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. இலக்கியங்கள் பயன் கருதி எழுதப்பெற்றுள்ளன.

இலக்கியத்தினால் கிடைக்கும் பயன் ஒன்றல்ல. இரண்டல்ல 27 என்கிறது வீரசோழியம்.

காதல் பாடல்களுக்குச் சொல்லப்பட்ட இந்த இலக்கணத்தை இலக்கியத்திற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்ள இயலும். ஓர் இலக்கியத்தைப் படிப்பதனால் உண்மை தெரியவரும். பெருமை, நிறை, பண்பு பொறை போன்ற குணங்கள் இலக்கியப் படிப்பால் கிடைக்கப்பெறும். ஐயம் அகலும். ஆர்வம் தோன்றும். ஒருவரை ஒருவர் மதிக்க இயலும். எனவே இலக்கியம் படிப்பதும் படைப்பதும் மனிதர்களை ஒருநிலையில் இருந்து மெல்ல மெல்ல அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் வாழ்க்கை முறையாகும்.

தொல்காப்பியம் தொகுநிலைக் கிளவி பயன் என்கிறது. அதாவது தொகுத்துச் சொல்லும் முறைமையைப் பயன் என்று உரைக்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட ஒரே ஒரு பயனை விரிவாக்கிறது வீரசோழியம்

இன்னும் இன்னும் பயன்கள் விரியும். நல்ல இலக்கியங்கள் மலரும். நாளும் மனித மனம் அன்பால்,பெருமையால். பொறுமையால் மேன்மை நிலை பெறும்.

கருத்துகள் இல்லை: