செவ்வாய், டிசம்பர் 15, 2015

யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?




நல்லவை எவை? கெட்டவை எவை? என்று உடனே சொல்லிவிட முடியுமா? கொஞ்சம் கடினம்தான். எனக்கு ஒன்று நல்லதாக இருக்கலாம். உங்களுக்கு வேறு ஒன்று நல்லதாக இருக்கலாம். நல்லது என்பது இதுதான் என்று எதையும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. கெட்டது என்பதையும் வரையறுத்துவிட முடியாது.

கெட்டவைகள் இருந்தால்தான் நல்லவைகள் எவை என அடையாளம் தெரிந்து கொள்ள இயலும். இது இது நல்லவை, இது இது கெட்டவைகள் என்று ஒரு பட்டியலுக்குள் எல்லாவற்றையும் அடக்கி விடவும் முடியாது. பின் எப்படி நல்லதை, கெட்டதை அறிந்து கொள்ள முடியும்?

அறிவு என்பதே நல்லது இது, கெட்டது இது என்று பகுத்து அறிந்து கொள்வதில்தானே இருக்கிறது. நல்லதன் பக்கம் சேர்வதும், கெட்டதன் பக்கம் தவிர்ப்பதும்தான் மனிதக் கடமையாகின்றது.

ஔவையார் மிகச் சிறப்பாக நல்லவைகளையும், அல்லவைகளையும் பட்டியலிடுகின்றார். அவர் காட்டும் நல்லவைகளும், அல்லவைகளும் வேறுபட்டன. ஆனால் அவற்றுக்குள் ஒற்றுமை உண்டு.

நல்லாரைக் காண்பதுவும் நன்று நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்று- நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

என்பது ஔவையார் வாக்கு.

நல்லவர்களைக் காண்பதுவும் என்பது கண்களால் காணப்படும் காட்சிகள் நல்லவைகளாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நல்லார் சொல் கேட்பது என்பது காதுகள் நல்லவைகளைக் கேட்பதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நல்லவர்களின் குணங்களை உரைப்பது நல்லது என்பது, வாயால் பேசுவதும் நல்லவைகளாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. நல்லவர்களோடு இணங்கி இருப்பதும் நன்று என்பது உடல் அளவில் நல்லதின் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறு அறிவு இருக்கின்றது. கண் பார்க்கும் அறிவைத் தருகிறது. காது கேட்கும் அறிவைத் தருகிறது. வாய் உண்பனவற்றை ஏற்கும் அறிவை, பேசும் அறிவைப் பெற்றிருக்கிறது. உடல் உணரும் இயல்பினைப் பெற்றிருக்கிறது. கண்கள், காதுகள், வாய், உடல் ஆகிய உறுப்புகள் நல்லதின் வயப்பட வேண்டும் என்று ஔவையார் விரும்புகிறார். ஐம்புலன்களே மனிதனை வெளிச் செல்ல வைக்கும் மயங்க வைக்கும் கருவிகள் ஆகும். அவற்றை நல்லதின் பக்கம் திருப்பவேண்டும்.

ஐம்புலன்களையும் நல்லதின் பக்கம் திருப்பி விட்டால் அதுவே நல்லவைகளை நமக்குள் கொண்டு வந்து சேர்க்கும் வழியாகும். நல்லதைச் செய்வதை விட அல்லதைத் தவிர்ப்பது என்பது இன்னும் தேவையானது.

அல்லவைகளையும் இன்னொரு பாடலாகத் தருகின்றார் ஔவையார்.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருஅற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே- தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

முன்பாடலுக்கு அப்படியே இணையான வெண்பா இது என்றாலும், நல்லவற்றிற்குப் பதிலாகத் தீயவைகள் இடம் பெற்றுள்ளன. நலம் மிக்க நல்லவர்கள் என்பதும் திரு அற்ற தீயார் என்பதாக மாறியுள்ளது.

மீளவும் அதே பாடலைப்போல் இதற்கும் விளக்கம் சொல்லலாம். கண்கள் தீயவர்களைப் பார்க்கக் கூடாது. தீயவர்கள் சொற்களைக் கேட்கக்கூடாது. தீயவர் குணங்களை எடுத்துச் சொல்வதும் தவறு. தீயவர்களோடு ஒத்துப் போவதும் தீயது என்கிறார் ஔவையார்.

கண் நல்லதைப் பார்க்க, செவி கெட்டதைக் கேட்க, வாய் நல்லதைப் பேச, உடல் கெட்டதை நோக்க என்று ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டால் நல்லதும் கெட்டதும் இணைந்துதானே மனிதன் இருப்பான் என்று ஒரு ஐயமும் தோன்றலாம். ஆனால் ஔவையார் தெளிவாகச் சொல்லுகின்றார்.

கண் தீயதிற்கு ஈடுபட்டால், காதும் தீயது பக்கம்தான் செல்லும். கண்ணில் தொடங்கி, காதில் விரிந்து, வாயில் வெளிப்பட்டு உடலில் கலக்கிற பாங்கு நல்லதிற்கும் உண்டு. கெட்டதிற்கும் உண்டு.

கண் கெட்டு, காது கெட்டு, வாய் கெட்டு, உடலும் கெட்டுப் போகும் தீயதன் பக்கம் சாராமல் இருப்பது எல்லா உயிருக்கும் நல்லதாகும்.

உலகின் ஒரு புறத்தில் நல்லது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் அல்லது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நல்லதின் ஆட்சி அதிகமாகவும், அல்லதின் ஆட்சி குறைவாகவும் இருக்கும் நிலையே உலகத்திற்கு நன்னிலையாகும்.


ஒவ்வொரு மனிதனும் தனிமனிதன் என்றாலும், அவன் மற்றவர்களுடன் இணங்கியே வாழவேண்டி உள்ளது. அவ்வகையில் அவன் இணங்கி வாழ முற்படும்போது, அவன் நல்லவர்களைப் பார்த்து இணங்கி வாழ வேண்டியிருக்கிறது. தீயவர்களை ஒதுக்கி வாழக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் மனிதன் நல்லவனா? கெட்டவனா? என்று தரம் பார்த்தறிய வேண்டியுள்ளது. அவனுடன் பழகும் நாமும் அவனைப் போல கெட்டவனாகவோ, நல்லவனாகவோ மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மனிதனை நல்லவனாக்குவது அவனின் பேச்சு, பார்வை, அவன் பழகும் முறை, அவன் கேட்கும் செய்திகள் ஒரு மனிதனைக் கெட்டவனாக்குவது அவனின் பேச்சு, பார்வை, அவன் பழகும் முறை, அவன் கேட்கும் செய்திகள். இவைதான் நல்லதிற்கும் கெட்டதிற்கும் உள்ள வரையறைகள் என்கிறார் ஔவையார். இவற்றைச் சுருக்கிச் சொல்வதானால் மகாத்மா காந்தியடிகள் மூன்று குரங்குகளின் பொம்மைகளைத் தன் மேசையில் வைத்திருப்பதை நினைவு கொள்ளலாம். தீயவற்றைப் பேசாதே என்று ஒரு குரங்கு வாய் பொத்தி நிற்கிறது. தீயவற்றைக் காணாதே என்று ஒரு குரங்கு கண்களைப் பொத்தி இருக்கிறது. மற்றொரு குரங்கு தீயவைகளைக் கேட்காதே என்று காதுகளைப் பொத்துகின்றது. இந்த மூன்று பொம்மைகளும் காந்தியடிகளின் மேசையின் மீது என்றைக்கும் இருக்குமாம். ஏனென்றால் இந்த செய்கை நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் தேவைப்படுவதாக இருக்கிறது. மனித மனம் குரங்கு போன்றது. அதனை ஆட்டி அதட்டி உட்கார வைப்பது மிகவும் சிரமம். அதனைச் செய்வதற்கு நினைவூட்டுவதாக அமைவன இக்குரங்கு பொம்மைகள்.

நல்லவர்களை நாளும் நினைப்போம். நாளும் அவர்கள் சொன்ன வார்த்தைகளை முழங்குவோம். நல்லவர்களாகவே வாழ்வோம். கெட்டவைகளை விலக்குவோம்.
நன்றி - முத்துக்கமலம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: