திங்கள், மார்ச் 16, 2009

எங்கள் கல்லூரி வாழ்வின் பதினெட்டாம் ஆண்டுக் கொண்டாட்டம்.


ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் கழித்து நாங்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது. சிவன் ராத்திரி அன்று தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் விழா கொண்டாடுவதற்காக ஒருநாள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் ஏறக்குறைய ஆசிரியர் வேலையில்தான் இருக்கிறோம் என்பதால் அந்த நாளே நாங்கள் சந்திக்கும் நாளாக அமைந்தது.
1988 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை நாங்கள் ஒன்றாய் ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பில் படித்தவர்கள். கல்லூரி என்றால் நாங்கள் படிக்கும்போது ஒன்றும் பெரிய கட்டிடமாக அது இருக்காது. நான்கு அறைகள், அதுபோக ஒரு நூலகம், இரு சிறு அறைகள். அவற்றில் அலுவலர்கள், முதல்வர் போன்றோர் இருந்தனர். இவ்வளவே எங்கள் கல்லூரியின் அக்கால வசதி.
இருந்தபோதிலும் அந்தக் கல்லூரியிலும் அமைதியாக, உள்ளன்போடு நாங்கள் பழகிப் படித்தோம் என்பதை இந்தப் பதினெட்டு ஆண்டுகள் கழித்துச் சந்தித்த சந்திப்பு காட்டியது.
ஆண்கள், பெண்களாக மொத்தம் நாற்பது பேர் நாங்கள் படித்திருப்போம். அந்த நாற்பதில் ஏறக்குறைய இருபத்தைந்து பேர்களுக்கு அரசாங்க அளவில் வேலைகள் கிடைத்திருக்கின்றன. மான அடிப்படையிலும், மன அடிப்படையிலும், பண அடிப்படையிலும் இப்பணிகள் கிடைத்திருக்கின்றன. இது ஓரளவிற்கு நிறைவைத் தந்தது. என்றாலும் வேலை கிடைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுள் உறுத்தியது.
இன்னமும் நாங்கள் படித்த கல்லூரி, படிப்பு பற்றிச் சொல்லாமல் இருப்பது நியாயமில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில்தான் நாங்கள் தமிழ்ப் பட்டப்படிப்பைப் படித்தோம். அதன்பின் பல்வேறு கல்லூரிகளில் படித்து இருந்தாலும் இதுவே எங்களின் தாய்ப்படிப்பாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது இக்கல்லூரியின் பெயரும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி என மாறிவிட்டது. ஓரளவிற்குக் கட்டிடங்களும் பெருகிவிட்டன.
கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி இவற்றில் உள்ள மாணவர்களுக்கும் எங்களுக்கும் பெருத்த வேறுபாடு அப்போது இருந்தது. அப்போதே இது எங்களுக்குத் தெரிந்தும் இருந்தது. தமிழ் படிக்கிற மாணவர்கள் மரபோடு இருக்கவேண்டும் என்ற பின்னணிக்கு இக்கல்லூரிச் சூழலும் காரணமாகி விட்டது. கிராமப்புறமும் எங்களை திசை திருப்பாமல் இருந்திருக்கிறது.
ஆனால் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கல்லூரிக்கு வந்த எங்களுக்குப் புதிய அனுபவங்கள் பல. பேருந்தினில் இருந்து முன்னரே இறங்கி அந்த ஊரின் பிரதான கடைவீதியில் கால்பதித்து நாங்கள் டீ குடித்த, கடன் சொன்ன கடைகள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டோம். இருந்தன. அவற்றிலும் நாங்கள் படித்த போது இருந்த ஆட்களே வயதாகிப் போயிருந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரிந்தது. எங்களை அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
மெல்ல நடந்து கல்லூரி வாசலை அடைந்து எங்கள் உறவை கல்லூரியில் உள்ள பழைய அலுவலர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் புதுப்பித்துக் கொண்டோம். புதியவர்களுடன் பழகிக் கொண்டோம். "ஏன் வந்தீர்கள் '' என்று கேட்காதவர்கள் பாக்கி இல்லை. "ஒன்றாய்ச் சேர வந்தோம் '' என்ற எங்களின் பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இந்தச் சந்திப்பிற்குள் ஏதோ அரசியல் இருப்பதாய் அவர்களுக்குப் பட்டது.
மாரியப்பன் இவர்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். வள்ளியப்பன், சுப்பையா இவர்கள் இந்தக் கூட்டத்தின் உள்ளூர் அமைப்பாளர்கள். மற்றபடி படித்தவுடனே வேலைக்குப்போன சுந்தரவடிவேல் பதினாறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று எங்களுக்கு எல்லாம் சீனியராகிவிட்டிருந்தார். இவரே எல்லாரையும்விட மிக சந்தோசத்தில் இருந்தவர். அடுத்து எங்களை நினைவுபடுத்தி கவிதை எழுதிவந்த பெருமாள், படிப்புத் திறனும் பண்பும் கொண்ட சேவியர், நெடிய உயரமுடைய செல்வ குமார், எங்களில் சிவப்பு நிறத்தை அதிகம் கொண்ட கூடலூர் சரவணன், கரிகாலன் போன்றோர் சந்திக்கக் கூட்டம் சிறப்பானது.
செல்போன்களில் புகைப்படங்களைப் பதிந்து கொண்டோம். என்னோடு வந்தவர்கள் அனைவரும் ஏறக்குறைய கல்லூரி ஹாஸ்டலில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் அங்குச் செல்ல வேண்டும் என்று சொன்னபோது அங்கு போக அனுமதி பெறவேண்டி இருந்தது. ஏனெனில் அது இப்போது மகளிர் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஹாஸ்டலே இல்லை. அப்படித் தங்கிப் படிக்கும் மாணவர்கள் யாரும் இங்கு இப்போது வருவதில்லை என்ற செய்தி வியப்பாக இருந்தது. அந்த ஹாஸ்டலில் நண்பர்கள் சென்று அவரவர்கள் எப்படி எப்படி உடகார்ந்து இருப்பார்கள், படுத்துக் கிடப்பார்கள், இயற்கையோடு எப்படி ஒன்றாகிக் கிடப்பார்கள் என்பதை எல்லாம் அவர்கள் நடித்துக் காட்டினார்கள். அவர்களின் அக்கால உடுப்பான ஒரு சிறு துண்டு, வெற்றுடம்பு என்ற எளிமைத் தோற்றம் இந்தக் காட்சிகளைச் சொல்லிச் சொல்லி அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த ஹாஸ்டலில் சமைத்த சமையல்காரர் தற்போது காலமாகிவிட்ட செய்தியை நண்பர்கள் துன்பத்துடன் பகிர்ந்து கொண்டனர். அதுபோல எம் நண்பர்களில் ஒருவனான சின்ன மெய்யப்பன் இறந்து போன செய்தியும் வருத்தத்தைத் தந்தது.
மெல்லக் கழன்று சுற்றுப் புறத்தை நோக்கினோம். சில வீடுகள் புதிதாக இருந்தன.நாங்கள் படித்த போது கன்றாக இருந்த ஆலமரம் விழுது விட்டிருந்தது. பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உருவாகி இருந்தது. கல்லூரிக்கு எதிராக இருந்த வேப்பமரங்கள் அந்த காலத்தில் மாணவிகளைப் பார்க்கும் மைதானம். அந்த இடத்தில் சற்று உட்கார்ந்து பழைய ஞாபகங்களில் நண்பர்கள் வளைய வந்தனர்.
இருப்பினும் மாணவர்கள் ஹாஸ்டல் மாணவர்கள் கைவிட்டுப்போனதில் நண்பர்களுக்கு எல்லாம் வருத்தம். அதுபோல எங்களுடன் படித்த தோழிகள் இந்தச் சந்திப்பிற்கு ஒருவர் கூட வராதது பெருத்த வருத்தத்தை அளித்தது உண்மைதான். வருந்தி வருந்தி அழைத்தும் கூட அவர்களில் ஒருவர் கூட வராதது பெரிய இழப்பாய் எல்லோருக்கும் பட்டது. அடுத்த முறை சந்திக்க வைப்போம் என வள்ளியப்பன் உறுதி கொண்டார். அவரே மாணவிகளிடம் அக்காலத்தில் மிக சகசமாய்ப் பழகியவர்.
அதுபோல இந்தக் கூட்டத்தில் மிக மிக கலகலப்பைத் தந்த செய்தி "கல்லூரியில் படிக்கும்போது ஒழுக்கமாய் இருந்தவனெல்லாம் இப்ப மாறிட்டான். அப்ப மாறி இருந்தவனெல்லாம் ஒழுங்காயிட்டான்.'' என்ற விமர்சனம்தான். இதுதான் மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவம்.
இந்தக் கூட்டம் முடிந்து நான் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு காவல் துறையில் பணியாற்றும் குமார சங்கர் கேட்ட " ஏண்டா என்னை விட்டுட்டு கூடிட்டிங்களே'' என்ற கேள்வி மனதிற்குள் ஏதோ செய்தது.
அந்தக் கல்லூரிக்கு வயது நூறாகி விட்டதாம். நூற்றாண்டு விழாவினை நன்றாகக் கொண்டாட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. எங்களின் பதினெட்டு ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் இந்தச் சந்திப்பு நாள் திருப்தியை அளித்ததில் ஆச்சர்யமில்லை.


1 கருத்து:

Venkatesh Kumaravel சொன்னது…

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html