ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

பகவத் கீதையில் ஏழு கேள்விகள்


13. பட்டனார் பகவத்கீதையில் ஏழு கேள்விகள்

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இறை சிந்தனைக் கருத்துகள் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. இறை சிந்தனையின்றித் தமிழ் இலக்கியங்களை அறிவது முழுப்புரிதலைத் தராது என்ற அளவில் இறை சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. இவ்வகை இலக்கியங்கள் ஒருபுறம் என்றாலும் இறை சிந்தனைகளை முழுவதும் தாங்கிய பக்தி இலக்கியங்கள் மற்றொரு புறத்தில் வளர்ந்து வந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தினைப் பக்தி இலக்கிய காலம் என்று குறிக்கும் அளவிற்கு முழுமையும் இறைசிந்தனையை விதைக்கும் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இதன் தொடர்ச்சியாய் சமயம் சார்ந்த தத்துவ நூல்களும் எழுந்தன. சைவத்திற்குச் சிந்தாந்த நூல்கள் என்றால், வைணவத்திற்கு வேதாந்த நூல்கள் விளைந்தன. இவற்றின் எதிர்நிலையில் நின்ற சமண, பௌத்த நூல்களும் இறை சிந்தனையை முன்வைத்தே அதன் மெய்ம்மையை ஆராயத் தலைப்பட்டன. இவ்வகையில் இறை சிந்தனைப் பாங்கு தமிழ் இலக்கியங்களில் பெரும் பங்கு வகித்து வருகின்றது.

இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை போன்றவற்றை வைணவம் சார் இறை செய்திகள் கொண்டனவாகக் கருத இயலும். கம்பரும், வில்லிப்புத்தூராரும் முறையே தம் காப்பியங்களான கம்பராமாயணத்திலும், பாரதத்திலும் வைணவ சமயக் கருத்துகளை, வேதாந்தக் கருத்துகளை விரித்துச் சென்றுள்ளனர். பகவத் கீதை தமிழில் தனிப்பட எழுதப்படவில்லை என்ற குறை பெருங்குறையாக விளங்கியது. இருப்பினும், இராமாயண மகாபாரத அளவிற்கு தமிழ் சார் கவிதை ஆக்கமாக பகவத் கீதை அமையாதது நிரப்பமுடியாத வெற்றிடமடாக இருந்து வந்தது. இதனை நிரப்பப் பல சான்றோர்கள் முயன்றனர். பட்டனார் என்பவர் வேதாந்த அடிப்படையில் பகவத் கீதை ஒன்றைப் பதிமூன்றாம் நூற்றாண்டில் படைத்துள்ளார். இவரின் முழுப்பெயர் சேமநகர் ஆயனார் பட்டனார் என்பதாகும். இவர் படைத்த பகவத்கீதை “பரமார்த்த தரிசனம்” என்று அழைக்கப்பெறுகிறது. இந்தப் பரமார்த்த தரிசனம் மூல மொழியான வடமொழி பகவத் கீதையின் அத்தியாயங்களை, கருத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது,

“விண்ணியல் மொழியினால் வியாதன் கூறிய
புண்ணிய கதையைநீ புகல்வது என்எனில்
எண்ணிய வகைபிறிது இல்லை யாரும்இந்
நுண்ணிய பொருளிலே நுழைய வேண்டியே” (3)

வியாச முனிவர் அருளிச் செய்த பகவத்கீதையை வடமொழியில் இருந்துத் தமிழ் மொழிக்கு நான் தருவதற்குக் காரணம் யாவரும் இறை தத்துவத்தின் நுண்ணிய பொருளை அறிந்து, வீடு பேறு அடைவதற்காகத்தான் என்று இப்பாடலில் பட்டனார் குறிக்கிறார்.


இவ்வகையில் வீடுபேற்றை அனைவரும் அடையும் வகையில் தமிழில் தரப்பெற்ற முதல் பகவத் கீதை நூல் இதுவேயாகும். இது பதினெட்டு அத்தியாயங்களை உடையதாகும்.

1. அருச்சுணன் சோக அத்தியாயம்

2. சாங்கிய யோக அத்தியாயம்

3. கர்ம யோக அத்தியாயம்

4. சம்பிரதாய அத்தியாயம்

5. ஞான கர்ம அத்தியாயம்

6.யோக அத்தியாயம்

7. மாயா ரூப அத்தியாயம்

8. எழுவகை வினா உரைத்த அத்தியாயம்

9. மாயா விகார அத்தியாயம்

10. விபூதி யோக அத்தியாயம்

11. விசுவரூப அத்தியாயம்

12. பக்தி யோக அத்தியாயம்

13. சேத்ர சேத்ரக்ஞ விபாக யோக அத்தியாயம்

14. குணாதீத அத்தியாயம்

15. பிரபஞ்ச அத்தியாயம்

16. தேவாசுர சம்பத்து: விபாக யோக அத்தியாயம்

17. குணவிகார அத்தியாயம்

18. சஞ்சேப அத்தியாயம்

ஆகியன அப்பதினெட்டு அத்தியாயங்கள் ஆகும்.


பரமார்த்த தரிசனமாகிய இந்தப் பகவத் கீதையானது உடல், உயிர் ஆகியவற்றின் தன்மை பற்றி அறிவிக்கும் நிலையில் பின்வரும் பாடல் அமைகிறது.

"பொன்றுவது உடம்புஅதனுள் நின்றபொருள் பொன்றாது
என்றும்ஓர் இயற்கையொடு நிற்கும்இயல் பைக்கேள்
முன்தொடர் மகப்பருவம் விட்டு இளமை மூப்போடு
ஒன்றும் உடல் ஆயினும் உயிர்க்கு இயல்பு அது அன்றால்” (14)

என்ற பாடலில் உடல் உயிர் இயல்பு தெளிவுபட உரைக்கப்படுகிறது. உடம்பானது அழியும். ஆனால் அதனுள் நின்ற ஆன்மா அழியாது. உடல் தன் மகப்பருவத்தைத் தாண்டி, இளமை, முதுமை அடைந்து இறக்கும். ஆனால் உயிரின் இயல்பு அதுவன்று. அதற்கு மகப்பருவம், இளமை, முதுமை கிடையாது. அழியாத உயிர் மற்றொரு உடலைப் பெறும்.

இப்பாடலில் எளிய சொற்களால் இனிய மொழியால் உயிர் தத்துவத்தை விளக்கி நிற்கிறார் பட்டனார். இது பட்டனாரின் கவிதையாக்கத்திற்குத் தரப்பட்ட சிறு சான்று மட்டுமே. அவரின் பாடல்கள் தத்துவங்களை எளிமைப்படுத்தித் தமிழில் தருவதில் முன்னிலை வகிக்கின்றன. இவர் பகவத் கீதையின் மூலத்தைக் கற்றவர் என்பதும் அவரின் படைப்பினால் தெரியவருகிறது.

பட்டனாரின் பகவத் கீதையில் மூல நூலில் உள்ளதன் அடிப்படையில் ஏழு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அவ்வேழு கேள்விகளைக் கேட்பவன் அருச்சுணன். அவற்றிக்குப் பதில் அளிப்பவர் கண்ணன். இம்முறையில் இக்கேள்விகள் எட்டாம் அத்தியாத்தில் எழுப்பப் பெற்றுள்ளன. இவ்வேழு கேள்விகளும் அடிப்படையில் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்விகளாகும். பதில்களும் ஆகும்.

ஏழு கேள்விகள்

1. பிரம்மம் என்றால் என்ன?

2. அத்தியாத்மம் எது?

3. விதிக்கின்ற கர்மம் என்பது எது?

4. அதிபூதம் எனப்படுவது யாது?

5. அதிதெய்வம் எது?

6. அதிஎச்சம் தேகத்தில் உள்ள தன்மை எப்படி?

7. தேகம் மரணம் அடையும்போது உம்மை உள்ளபடி அறியும் வழி யாது?

என்ற அடிப்படையான கேள்விகள் ஏழினை முன்வைக்கிறான் அர்ச்சுணன். இவை அனைத்திற்கும் கண்ணபிரான் பதில் அளிக்கிறார். அவர் அளிக்கும் பதில் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.


பிரம்மம்

பிரம்மம் என்றால் என்ன என்ற முதல் கேள்விக்கு

"அரியது அழியாமை அது அனைத்தினும் உரைக்கில் பெரியது மொழிந்த பிரமம் பிறவும் நீகேள்” (8, 3) 

என்று பதில் தருகிறார் கண்ணபிரான்.

பிரம்மத்தின் இயல்பினைச் சொல்லுவது என்பது சொல்லுக்குள் அடங்காதது. அது அரிதானது. ஞானம், அஞ்ஞானம், கால தேச வர்த்தமானங்கள் மற்றும் பிறவற்றால் அழிவைப் பெறாதது பிரம்மம் எனப்படுகிறது. இது உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மேலானது.

இவ்வாறு பிரம்மத்தின் இயல்பினைக் கண்ணபிரான் உரைக்கிறார்.


அத்தியாத்மம்

"அந்தக் கரணங்களில் நின்ற அறிவு அத்தியாத்மம் ஆவதுதான்” (8. 4) 

என்று அத்தியாத்மத்திற்குப் பொருள் சொல்கிறார் கண்ணபிரான். பிரம்மத்தின் உருவம் எல்லா உருவங்களில் கலந்து உள்ள தன்மையை அறிந்து கொள்வது அத்தியாத்மம் ஆகும். இது ஆன்மாவிற்கான இலக்கணம் ஆகும்.

கர்மம்

உயிர்களை, உலகங்களைப், பிறவிகளை உருவாக்கும் பிரம்மத்தின் செயல்பாடுகள் கருமம் எனப்படுகிறது.

"இந்தப் பிறவி தனை ஆக்கும் யாகம் - கருமம் என்பதுதான் “ (8-4) 

என்கிறது பட்டனார் கீதை.

அதிபூதம்

அழியக் கூடிய உடம்பு முதலான பொருள்கள் அதிபூதம் எனப்படும். அழியக் கூடிய உடம்பின் மீதான அபிமானமும் அதிபூதம் எனப்படுகிறது.

"நந்தற்கு அமைந்த உடம்பு அதனை நான் என்கின்றது அதிபூதம்” (8-4) 

என்று இதனை உரைக்கிறது பட்டனார் கீதை

அதி தெய்வம்

உடம்பின் உள் ஆன்மாவாகிய புருடன் இருக்கிறான் என்பதை அறிவது அதிதெய்வம் எனப்படும். இதனைப் பட்டனார் கீதை

"பந்தப்படும் இவ்உடற்கு அமைந்த புருடன் தெய்வம் எனப்படுவான்” (8-4) 

என்கிறது.

அதியக்ஞம்

"எஞ்சுதலை இல் அதி எச்சம் ஆகின்றேன் நான்” (8-5) 

என்பது அதியக்ஞத்தின் விளக்கம் ஆகும். உடம்பின் உள் உள்ள ஆன்மாவில் இறைவன் நின்று நடத்துகிறான் என்று அறிவது அதியக்ஞம் ஆகின்றது.


கடவுளை அறியும் வழி

மரணம் அடையும் நேரத்தில் கடவுளை அடையத் தேடுகிறது ஆன்மா. அதன் இயல்பினைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

“இறக்குங்கால்
நெஞ்சுகவரும் நெறிகள் எலாம் அடைத்து நினை யப்படுவதுநான்
அஞ்சுபுலனும் பொறி ஐந்தும் அடக்கி அறிவு என்பாலதாய்த்
துஞ்சும் அவர்கள் எனை அடைவர்” (8-5)

என்ற பாடலடிகளில் மரணத்தை நெருங்கும் உயிரின் இயல்பினைத் தெளிவாக உணர்த்துகிறார் பட்டனார்.

மரணத் தருவாயில் ஐந்து புலன்கள், ஐந்து பொறிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாகக் குறைகின்றன. அறிவு மட்டுமே நிற்கிறது. இதுவரை அடங்காத அடங்க மறுத்த பொறிகள், புலன்கள் அடங்கி நிற்கும் அருமையான பொழுது இது. இப்பொழுதில் அறிவு ஒன்று மட்டுமே நிற்கிறது. அந்த அறிவு என்பால் நின்றால் அதுவே எனை அடையும் வழியாகும். இவ்வகையில் இறைவனை அடையும் வழியினை ஏழு கேள்விகள் வழியாகத் தெளிவுபடுத்துகிறது பட்டனார் கீதை. இவை அனைத்தும் அப்படியே மூலநூலிலும் உள்ளன என்பது கருதத்தக்கது.

இவ்வாறு வீட்டு நிலை பெற்ற சான்றாளராக பட்டனார் சங்கர பகவற்பாதரைக் காட்டுகிறார்.

“ஆற்று இயல் வழுவிய புலன்கள் ஐந்தையும்
பாற்றிய சங்கர பகவற் பாதன் என்று
ஏற்றிய பெயரினன் அருளினால்யான்
சாற்றினன் இப்பெரும் தரும நூலையே” (18-70)

என்று இக்கீதையின் நிறைவுப்பாடல் அமைகிறது. வேதநெறியில் இருந்து வழுவிட வைத்த புலன்கள் ஐந்தையும் வென்றிட்ட சங்கர பகவற்பாதன் அருளினால் இந்தத் தரும நூலை நான் செய்தேன் என்று குறிக்கிறார் பட்டனார். சங்கரர் இறைவனை அடைந்தவர் என்ற நிலையில் புலனின்ப நுகர்வுகளை நீக்கி ஆண்டவன்பால் சிந்தனை, அறிவு அனைத்தையும் தேக்கும் அனைவரும் ஆண்டவனை அடைய இயலும் என்பதை உணரமுடிகின்றது,

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

நாமக்கல் போற்றும் தமிழ்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் கவிதைகள் மென்மையும், அகிம்சை உணர்வும் காந்திய மதிப்பும் கொண்டவை. கவிதை என்றால் என்ன என்ற கேள்வியைத் தலைப்பாக அமைத்து அவர் ஒரு கவிதையைப் பாடியுள்ளார். கவிதைக்கான இலக்கணத்தைக் கவிதையிலேயே தருகின்றார்.

"அசதியைக் கிள்ளி அறிவைக் கிளப்பி
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி
இல்லாத ஒன்றையும் இருப்பது போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
…. பாடு படாமல் பாடம் பண்ணவும்
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை எனப்படும்"

என்பது நாமக்கலாரின் கவிதைக்கான இலக்கணம் ஆகும். பாடு படாமல் மனதில் நிலைத்து நிற்பது கவிதை. அசதியைத் தள்ளி அறிவைக் கிளப்பி நிற்பது கவிதை. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி நிற்பது கவிதை.


கவிதைக்கான நோக்கம் என்ன என்று கேட்டால் அதற்கும் இக்கவிதை பதில் தருகிறது. "அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்” என்று கவிதையின் நோக்கத்தைச் சொல்கிறது.

கதையோ பாட்டோ கற்பனை இல்லையென்றால் கணக்காகும் கவிதையாகாது. கற்பனை மிகுந்த கவிதைகள் அதிகம் கொண்டது தமிழ் மொழி என்று கவிப்பெருமை பேசுகிறார் கவிஞர்.

இவர் பாரதியாரை நேரில் சந்தித்தவர். பாரதியாரை நண்பர்களுடன் இவர் ஒருமுறை சந்திக்கிறார். அது மங்கலான மாலை நேரம். பாரதியின் வடிவம் ஒரு நிழல் போலக் கவிஞருக்குத் தெரிந்தது. இவரை ஓவியர் என்றும் கவிஞர் என்றும் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றனர். அப்போது பாரதியார் ஓவியப்புலவர், காவியப் புலவர் என்று இவரைப் புகழ்கிறார். பின்பு பாரதியார் இவரை ஒரு கவிதை பாடச் சொல்கிறார். இவர் மென்மையான குரலில் பாடுகிறார். இதனைக் கேட்ட பாரதியார் "பலே! பாண்டியா! நல்ல கவிதை” என்று பாராட்டியுள்ளார். கவிஞர் பாரதியாரிடம் தாங்கள் ஒரு பாடலைப் பாடிக்காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்குப் பாரதியார் "ஆர்டருக்கு எல்லாம் பாடல் வராது” என்று சொல்லியுள்ளார். அதாவது ஆணைக்கு இணங்கி பாடல் பிறக்காது என்று சொல்லி விட்டு அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணிக்கு நாமக்கல் கவிஞர் உறங்கும் இடத்திற்கு வந்து அவரை மட்டும் எழுப்பி அதிகாலைக் கவிதை பாடிக்காட்டுகிறார். அதிகாலை ஆறுமணி வரை இந்தப் பாட்டுப் பிரவாகம் பாய்ந்துள்ளது. ஆணைக்கு இணங்காத கவிஞர் அன்புக்கு இணங்குகிறார். இந்த மகாகவியின் சந்திப்பு பெருத்த மகிழ்வை நாமக்கல் கவிஞருக்குத் தருகிறது.

பாரதியை அவர் நினைந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.

"சுத்த வீர வாழ்வு சொல்லித்தந்த நாவலன்
சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்தி செல்லச் சாலை கண்ட சாரதி
சத்தியத்தில் பற்றுக் கொண்ட சுப்பிரமணிய பாரதி"

என்ற அவரின் பாரதி பாட்டு பாரதியை அவர் தரசித்த பொலிவைக்காட்டும்.

நாமக்கல் கவிஞர் தமிழின் மீதும் தமிழர் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தவர். அவரின் பாடல்களில் அவை வெளிப்பட்டு நிற்கின்றன.

"அன்பு நிறைந்தவள் தமிழன்னை
அருளை அறிந்தவள் தமிழன்னை
இன்பக் கலைகள் யாவையுமே
ஈன்று வளர்த்திடும் தேவியவள்"

என்று தமிழைத் தமிழன்னையாக உருவகம் செய்துப் போற்றுகிறார்.

மேலும் தமிழ்மொழியைப் பற்றி;

"பக்தி நிறைந்தது தமிழ் மொழியே
பரமனைத் தொடர்வது தமிழ் மொழியே
சக்தி கொடுப்பவள் தமிழ்த்தாயே
சமரசம் உடையவள் தமிழ்த்தாயே"

என்று பாடுகிறார்.

"மாநிலம் முழுவதும் ஓர் சமுதாயம்
மக்களுக்கெல்லாம் ஒருநியாயம்
தானென அறிஞர்கள் தலைவணங்கும்
தருமம் வளர்த்தவள் தமிழணங்கே "

என்று தமிழரின் பண்பாட்டினையும் பாடுகிறார் நாமக்கல்லார்.

தமிழ் வளரவும் வழி காணுகின்றார் நாமக்கல்லார்.

" புதுப்புது கவியும் புகழ் பெரு நூல்களும்
விதம்விதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியாசனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே”

தமிழைப் பிறநாட்டவரும் போற்றும் மொழியாக, இலக்கியங்கள் கொண்டதாக உயர்த்த வேண்டும் என்பது நாமக்கல்லாரின் சிந்தனை.

உலக இலக்கிய வரிசையில், உலக மொழிகளின் வரிசையில் அழியா தனித்த இடத்தைப் பெறச் செய்யும் நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்ற நாமக்கல் கவிஞரின் ஆர்வம் வெற்றி பெற உழைப்பது உலகத் தமிழரின் கடனாகும்

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்Siragu lady writer1
தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில் முகிழ்த்த காலம் தொட்டே இவ்வெண்ணிக்கை குறைவு இருந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கட்டுரைகளை எழுதுவதற்கு என்று ஒரு தகுதி இருக்கவேண்டும் என்ற எண்ணம், கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் குறைவு, கட்டுரையின் கருப்பொருள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் என்று பல தடைகள் காரணமாக இவ்வெண்ணிக்கைக் குறைவு நிகழ்ந்திருக்கலாம், தொடர்ந்து வரலாம்.
தமிழில் மூத்த பெண் கட்டுரையாளர் என்று நீலாம்பிகை என்ற அம்மையாரைக் குறிப்பிடலாம். இவர் மறைமலை அடிகளாரின் மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர்.  இவர் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு(1928), பட்டினத்தார் போற்றிய மூவர்(1934), தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952)” ஆகிய நூல்களைப் படைத்தவராக அறியப் பெறுகிறார். அகராதித் துறையில் நுழைந்த பெண் இவர் என்றும் பெருமை கொள்ள முடிகின்றது.
இவரின் கட்டுரை நூல்கள் அனைத்தும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் ஆசிரியையின் வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளன. இவரின் சில நூல்கள் மறுபதிப்புகள் பெற்றுள்ளன.
குறிப்பாக இவரின் படைப்புகளில் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு” என்ற கட்டுரை நூல்  ஆயித்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் வாழ்ந்த பெண்களின் நிலையை தன் கட்டுரைக் கருப்பொருளோடு உடன் கூட்டி உரைப்பதாக உள்ளது.
 ‘நந்தமிழ் நாட்டவர் தம் பெண்மக்கள் கல்வியில் உயர்ந்து மேன்மக்களாக வேண்டுமென்று கருதுகின்றார்களில்லை. இவர்கள் தமக்குப் பெண்மக்கள் பிறந்தவுடனே வருந்துவது மட்டுமின்றி அப்போதே அவர் தமக்குக் கணவர் யார் அமைவார்களென்று கவலை கொள்கின்றனர். இன்னும் ‘‘தீவினை செய்தவர்களே பெண்மக்களாய்ப் பிறக்கின்றனர். இவர்கள் வீட்டு வேலைகளை ஒழுங்காகக் கற்றுக் கொண்டாற் போதும். இவர்கட்குக் கல்வி எதற்கு, இவர்கள் கல்வி கற்று ஆண்மக்களைப் போல் பொருள் தேடுவார்களா இவர்கள் அங்ஙனம் கற்றுப் பேரறிவாளர்களானாலும் ஊரார்க்குப் பயன்படுகின்றவர்களேயல்லாமல் நமக்குச் சிறிதும் பயன்படார்’ என்று பலவாறாகக் கூறிப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதில் சிறுதும் கருத்தில்லாதவர்களாக இருக்கின்றார்கள்” என்ற இந்த நூலின் முன்னுரைப் பகுதி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான சிந்தனை ஆகும். ஆனாலும் இந்தச் சிந்தனையின் ஒரு சொல்லைக்கூட விலக்கமுடியாத நிலைதான் இன்னமும் இந்நாளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணுகையில் பெண் விடுதலையின் வெற்றி பெறா நிலை புரியவரும்.
இக்காலப் பெண்கள் அதிகமாகக் கற்கிறார்கள். அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். அவர்களின் கல்வி ஆங்கிலக் கல்வியாகச் செழிக்கிறது. இதனையும் நீலாம்பிகை அம்மையார் கணக்கில் கொண்டு அது குறித்தும் தம் கருத்தை இம்முன்னுரைப் பகுதியில் எடுத்துரைக்கின்றார்.
‘‘சிலர் மட்டுமே தம் பெண்மக்களுக்குக் கல்வி கற்பிக்க முன் வ்ருகின்றார்கள். ஆனால் இவர்கள் முயற்சியும் சிறந்த முயற்சியின் பாற் பட்டதன்று. இவர்கள் தம் பெண்மக்களை உயர்தரக் கல்லூரிகட்கு அனுப்பி ஆங்கிலக் கல்வி மட்டுங் கற்றுப் பெரும் பட்டங்கள் பெறும்படி செய்கின்றார்களே ஒழிய அவர்கள் தம் தாய்மொழிக் கல்வியிலும் பெரும் புலமை அடையுமாறு ஊக்குவிக்கின்றார்களில்லை. இவர்கள் தம் பெண்மக்கள் ஆங்கிலக் கல்வியில் உயர உயரத் தம் தாய்மொழியினிடத்தில் சிறிதும் பற்றில்லாமல் நம் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் அறவே மறந்து மேனாட்டவர்களைப் போல் நடக்கத் தொடங்குகின்றனர். ‘தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவு நூற்கல்வி இல்லாத பெண்மக்கள் அறிவுடையராதல் முடியாது’ என்று இம்முன்னுரைப் பகுதி மேலும் தொடர்கிறது.
இதனுள் இவ்வம்மையார் உணர்த்த வரும் கருத்தின் ஆழம் இற்றைக் காலத்திற்கு மிகவும் பொருந்துவது. தாய்மொழியைப் பற்றிய அறிவு,தாய்மொழி இலக்கியங்கள் பற்றிய அறிவு என்பது பண்பாடு, பழக்க வழக்கங்கள் உடன் கொண்டு வளரும் அறிவு என்பதை இவ்வம்மையார் வலியுறுத்துகின்றார்.
Siragu lady writer2
இக்கட்டுரையை இவ்வம்மையார் எழுதியபோது மேனாட்டவர்கள் நம் நாட்டிலேயே ஆட்சி செலுத்தி வந்தனர். தற்போது அவர்கள் சென்றுவிட்டபோதும் மேனாட்டாரைப் போல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் முறைமையிலேயே பெண்கள் கற்பது, பழகுவது போன்றன இருப்பதை எண்ணுகையில் இவ்வம்மையாரின் கருத்து நடைமுறையாக்கப்பட வேண்டும் என்ற பெருநோக்கத்தின் தேவை தெரியவருகின்றது.
இப்பழக்க வழக்கங்களை, மரபுகளை உண்டாக்குவதற்காகவே தான் கட்டுரைகளை, நூல்களை எழுதுவதாக இவ்வம்மையார் குறிப்பிடுகின்றார்.  இவர் இராயபுரம் பகுதியல் இருந்த நார்த்விக் பெண்கள் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக விளங்கியவர் என்ற நிலையும் இங்கு எண்ணத்தக்கது. பெண்கள் கல்லூரி என்ற கட்டமைப்பு முழுக்க முழுக்கப் பெண்கள் நலம் சார்ந்தது என்பது கொண்டு இவ்வகையில் அவரால் சிந்திக்க முடிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று பெண்மணிகளின் வரலாறுகளை மேற்காட்டிய கட்டுரை நூலில் தனித்தனியாக முதலில் காட்டுகின்றார். அதன்பின் இப்பெண்கள், இவர்களின் வாழ்வு, இவர்களின் செயல்கள் குறித்த தன் ஆய்வுக் கருத்துக்களை இத்தனித்தனிக் கட்டுரைகளின் பின்பகுதியில் எடுத்துரைக்கின்றார். இதே முறை பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்ற நூலிலும் கடைபிடிக்கப் பெற்றுள்ளது. அதாவது எடுத்துக் கொண்ட பொருளின் அடிப்படைக் கருத்துக்களை முதலில் அறிவித்து விட்டு அதன்பின் ஆராய்ச்சி செய்திகளை அளிப்பது என்ற முறைமை இவரிடம் காணப்படுகிறது.
 இவ்வாராய்ச்சிப் பகுதிகளில் பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நெறிகள், தற்காலத்தில் தோன்றும் முரண்பாடுகள் போன்றன குறித்து ஆங்காங்கே எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்கள் தேர்ந்த பெண்ணியவாதியின் கருத்துக்களாக இருக்கின்றன.
பெண்களுக்கு உரிய குணங்களுள் ஒன்று பேதைமை ஆகும். இப்பேதைமை என்பதை மேலோட்டமாகப் பொருள்கொள்வதானால் ‘‘அறிவின்மை’ என்று பொருள் கொண்டுவிடமுடியும். மேலும் ‘‘பேதை’ என்ற சொல் பொதுவாக அறிவற்றவர்களைக் குறிப்பதாக இருப்பினும், பெரும்பாலும் பெண்களுக்கே உரிய சொல்லாக இது நடைமுறையில் விளங்குகிறது. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்பதால் அவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராகவே ‘‘பேதை’ என்ற பொதுப் பெயர் மாறிவிட்டது. இவ்வம்மையார் இதற்குத் தரும் விளக்கம் புதுமையாய்ப் பொலிகிறது.
‘‘பேதைமை என்பது ‘‘கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை’ என்றார் ஆசிரியர் நக்கீரனார். இதன் பொருள் பேதைமையென்று சொல்லப்படுவது அறிவுடையோரால் அறிவுறுத்தப் பட்டவைகளை ஏற்றுக் கொண்டு அவைகளை எளிதிலே வெளியிடாது தக்க காலம் வாய்த்த பொழுது பிறர்க்கு அறிவித்து வெளிவிடுதலாம்.  அறிவுடைய பெண்மக்கள் எதனையும் ஆராய்ந்தறிந்து நேரமறிந்து சொல்லுவர். ஊழிக்காலந் தவமுயலும் தவமுடையாரும் பெறர்க்கரியதாம் இறைவனது பேரருட்டிறத்தைத் தாம் பெற்றதனை அம்மையார் தம் கணவருக்கு உடனே சொல்லாது மயங்கினார்’ என்ற இப்பகுதி காலைக்காலம்மையார் முதலிலேயே ஆண்டவன் அருளால் பழம் கிடைத்தமையை, அதாவது தனக்கு உள்ள அருள் திறத்தைக் கணவனிடம் தெரிவிக்காமல் விட்டதற்கான காரணத்தைக் காட்டுவதாகும். பேதை, பேதைமை என்ற சொல்லின் இழிபொருளை(திரிக்கப் பெற்ற பொருளை)க் களைய இப்பாடு பட வேண்டி இருக்கிறது. பெண்களும் ஆய்ந்தறியும் குணம் உடையவர்கள் என்பதைக் காட்ட இத்துணைத் துயரப்படவேண்டி இருக்கிறது.
காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்றார். இது எதனால் பெறப்பெற்றது என்பதற்கு இவ்வாசிரியர் கூறும் காரணம் புதுமையும் வளமையும், தற்காலச் சூழலும் சார்ந்தது.
 ‘‘அம்மையார் தாம் எழில் மிக்க உடம்போடிருந்தால் வெளியே நினைத்த இடங்கட்கெல்லாம் போய்ச் சிவ பெருமானை வணங்குவதற்கு இடையூறாகுமென்றும், உலகத்தார் தொடர்பை அறவே நீக்கவேண்டுமென்றும் பேய்வடிவு பெற்றனர்.’
இப்பகுதியில் பெண்களின் உடல் அழகு அவர்களுக்குத் தரும் இடைஞ்சலை வெளிப்படுத்துவதாக உள்ளது. பெண்களை ஆண்கள் அழகின் பொருட்டாகவே அணுகும் முறைமையைச் சாடுகிறது. பெண்கள் நினைத்த இடத்திற்குச் செல்ல இயலா நிலையை எடுத்துக்காட்டுவது.
திலகவதியார் பற்றிய ஆய்வுப் பகுதியிலும் அவரின் வரலாற்றில் உள்ள பெண் மையப் பகுதிகளை இவர் பெண்ணியத் திறனாய்வு அடிப்படையில் திறனாய்வு செய்கின்றார். திலகவதியார் தனக்கு முன்னரே நிச்சயிக்கப் பட்ட ஆண்மகன் (கலிப்பகை) இறந்தபின் தனக்கு மணவாழ்வு வேண்டாம் என்று விலக்கி தன் தம்பி வாழ்வு உளதாகவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தார்.
இவரின் இம்முடிவு குறித்து இக்காலச்சிந்தனையோடு இவர் சில கருத்துக்களைத் தருகின்றார். ‘‘அறிவுள்ள தாய் தந்தையரை வாய்க்கப் பெற்ற பெண்மக்கள் தம் பெற்றோர் தஹ்சொற் கிணங்கி அவர் குறித்த ஆடவரை மணஞ் செய்து கொள்வது குற்றமாகாது. அங்ஙனமாயினும் தம் மக்களுக்கு மாறான கணவன்மாரை அவர்களொடு பிணைத்துவிட்டு அதனால் அவர் துண்புறுதலை பெற்றோர் காணப் பொறுப்பரோ என வினவின்  எத்தனையோ தாய் தந்தையர் பொருள் மிகுதியாயுள்ள கிழவர்க்கும் முன்னரே மனைவியுள்ள ஆடவர்க்கும், செல்வமுடைய தீயவர்க்குந் தம் மக்களை மணஞ் செய்து கொடுத்துப் பின்னர் அதனை ஊழ்வினைப் பயன் என்கின்றனர். பிறகு தம் மக்கள் செல்வம் இழந்தோ அல்லது தம் கணவன்மார் கொடுஞ் செயலுக்கு ஆளாகியோ வருந்தும் போது கூட ஊழ்வினை யெனக்கூறுவாரே ஒழியத் தாம் செய்தது பிழை என்று உணரார். ”
இப்பகுதியில் பெண்களை மணம் செய்விக்கின்றபோது ஏற்படும் முறைமாற்றங்களை, அவதிகளை இவ்வம்மையார் தெளிவாக எடுத்துரைக்கின்றார். திலகவதியார் தாய், தந்தை தனக்குக் காட்டிய ஆண்மகனே தன் கணவன் என்று கொள்ளுவதற்கு அவரின் தாய் தந்தையர் நல்ல தேர்வைச் செய்திருந்தனர். ஆனால் தற்காலத்தில் அத்தேர்வு முறையற்றதாக இருக்கிறது என்ற செய்தி இங்கு பதியவைக்கப் பெற்றுள்ளது.
இதுபோலவே மங்கையர்க்கரசியார் பற்றிய கட்டுரையிலும் இவரின் பெண்மைத் தெரிக்கும் கருத்துக்களைக் காணமுடிகின்றது. சேக்கிழார் காட்டும் மங்கையர்க்கரசியார் பற்றிய பாடல்கள் குறைந்த அளவினவே. இக்குறைவை எடுத்துக்காட்டாது இக்கட்டுரையை மிக விரிவாக இவ்வாசிரியர் எழுதியுள்ளார். இவ்வாராய்ச்சிப்பகுதியில் மங்கையர்க்கரசியாரின் வாழ்க்கைச் சிறப்பிக்கப்படுகிறது. அதனுடன் முன்னர் சுட்டியதுபோலவே பல தற்காலக் கருத்துக்களும் எடுத்தாளப் பெறுகின்றன.
‘தையல்சொல் கேளேல்’ என்ற வாக்கு இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. தையல் – என்னும் சொல்லுக்குப் பெண் என்று பொதுப்பட பொருள் கொண்டாலும் பெண்ணிலும் அறிவுடையாரும், அறிவிலாதவரும், தீயோரும் என மூவகையினர் இருத்தலால் ஒளவையார் கூறிய தையல் சொல் கேளேல் என்னும் இச்சொற்றொடரிலுள்ள தையல் என்னும் சொல்லுக்குத் தீய தன்மையுடைய பெண் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். ஒழுக்கமில்லாக் கொடிய பெண் மக்களை நம்பி அவர் சொற் கேட்டு எத்தனையோ ஆண் மக்கள் தம் அருமை மனைவி மக்களை ஊணுக்கும்  உடைக்கும் காற்றாய்ப் பறக்கவிட்டுத் தம் பெரும் பிறவியைப் பாழாக்குவது கண்டே அறிவிற் பெரிய ஒளவையார் அவர்களை நோக்கிக் கொடிய பெண்களது சொற்கேட்டு வீணாகாதே என்று கூறினார்.
பெண் கூறிய பழமொழியின் உண்மையை உணர்த்த இத்தனை பாடு படவேண்டி உள்ளது.
இவ்வாறு நீலாம்பிகை அம்மையார் தேர்ந்த பெண்ணியச் சிந்தனை உள்ளவராக இருந்து கட்டுரைகளைப் படைத்துள்ளார். பெண்கல்லூரியில் பணிபுரிதல் என்ற நிலையில் பெண்களை, பெண் உலகை எப்போதும் கண்டுகொண்டிருக்கிற இவரின் சிந்தனையில் பெண்ணியம் மிளிர்வது என்பது வியக்கத்தக்கதல்ல. குறிப்பாக பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களைத் தகர்ப்பது என்ற நோக்கில் இவரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன என்பது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற செய்தியாகும்.

நன்றி http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/

புதன், ஆகஸ்ட் 16, 2017

காளமேகத்தின் அறிமுகம்

அறிமுகம் செய்வது என்பது பெரிய கலை. ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அறிமுகம் செய்யும்போது இருவரின் மனங்களும் கசங்கி விடாமல், நொருங்கி விடாமல் மென்மையான சொற்களால் மேன்மையாக அறிமுகம் செய்யவேண்டும்.

சுய அறிமுகம் செய்து கொள்வது என்பது இன்னும் கடினமாகது. எதிரில் நிற்பவரிடம் நம்மைப் பற்றி அதிகமாகவும் சொல்லிவிட முடியாது. குறைவாகவும் சொல்லமுடியாது. எதனை விடுவது, எதனைக் காட்டுவது என்ற குழப்பத்திற்கு ஆளாகி எதையும் சொல்லாமல் வெற்றாளாக நின்று விடுகிற நிலைகூட ஏற்பட்டிருக்கலாம்.

காளமேகப்புலவர் ஒரு பெருங்கவிஞர். இவரின் இயற்பெயர் வரதராசன் என்பதாகும். இவர் மேகம்போல கவிமழை பொழிவதால் காளமேகம் என்று சிறப்பிக்கப் பெற்றார். இவரின் இயற்பெயர் மறைந்து காளமேகம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்துவிட்டது. இலக்கிய வரலாறுகளிலும் ஆளுமை பெற்றுவிட்டது.

காளமேகத்திடம் அதிமதுரக் கவி என்ற கவிஞர் “யார் நீவீர்” என்று கேட்டார்.

அப்போது;

“ஐந்து நாழிகையில் தூதினைப் பாடுவேன்
ஆறு நாழிகையில் மாலை பாடுவேன்
ஏழு நாழிகையில் அந்தாதி பாடுவேன்
பத்து நாழிகையில் மடல் கோவை பாடுவேன்
ஒரு நாள் முழுவதும் இருந்து பரணி பாடுவேன்
காவியம் இரு நாள்களில் பாடி முடிப்பேன்”

என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகம்.


எத்தனை பெரிய தன்னம்பிக்கை அவரிடம். அதெல்லாம் சரிதான். அதென்ன நாழிகைக் கணக்கு. இருபத்து நான்கு நிமிடங்கள் ஒரு நாழிகை ஆகும்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் தூது இலக்கியம் பாடிடும் வல்லமை பெற்றவர் காளமேகம். அவருக்கு இரண்டரை மணி நேரம் மாலை இலக்கியம் பாடப் போதுமானது. உலா, அந்தாதி இலக்கிய வகைகளைப் பாட இரண்டே முக்கால் மணி நேரங்கள் போதுமானது. நான்கு மணி நேரத்தில் மடல், கோவை பாடும் வல்லமை பெற்றவர் காளமேகம். நாள் முழுவதும் பாடுவது பரணி. இரு தினங்களில் பாடுவது காவியம்

இந்தப் பட்டியலில் காளமேகத்தின் கவி வல்லமை தெரிகிறது. அதே நேரத்தில் எந்த இலக்கியப் படைப்பு எவ்வளவு நேரத்தில் எழுதப்பட இயலும் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. தூது இலக்கியம் கண்ணி என்ற பாவகை சார்ந்தது. அது பாட எளிமையானது என்பது தெரியவருகிறது. மாலை இலக்கியம் தூதுக்கு அடுத்த நிலையில் பாடுவது எளிமையானது. உலா, அந்தாதி அடுத்த நிலையில் பாடவல்லது. அதவாது நூறு பாடல்கள் உடையது அந்தாதி. அந்தாதித் தொடையில் பாடப்படுவது. இதில் ஒரு பாடல் பாட ஒன்றரை நிமிடங்கள் போதுமானதாகக் காளமேகத்திற்கு இருந்துள்ளது. பரணி இலக்கியம் பாடுவது கடினமானது என்பதும், காவியம் பாடுவதும் கடினமானது என்பதும் இந்த வரிசையின்படி தெரியவருகிறது.

அதிமதுரகவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னதாக இன்னொரு தனிப்பாடலும் கிடைக்கிறது.

“இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா
இருந்தால் இருந்தேன். எழுந்தேனே ஆயின்
பெருங்காளமேகம் பிள்ளாய்”

என்னும் பாடல் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் காளமேகம்.

இம் என்று சொல்லுமுன்னே எழுநூறு பாடல்கள் எண்ணூறு பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றவன். அம் என்று சொன்னால் அந்தக் கால எல்லைக்குள் ஆயிரம் பாடல்கள் பாடி முடித்துவிடுவேன். சும்மா இருந்தால் இருப்பேன். பாடக் கிளம்பிவிட்டால் நீர் நிறைந்த காளமேகம் போலப் பொழிவேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகக்கவி.

பாடல் பாடுவதே தன் வாழ்க்கை என்று வாழ்ந்திருக்கிறார் காளமேகக்கவி. கவிதைகள் படைக்காத நேரம், சும்மா இருக்கும் நேரம் என்றும் காளமேகம் குறித்திருப்பது அவரின் கவிதையாற்றலின் மேன்மையைக் காட்டுவதாக உள்ளது.

எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் வாக்குக்கு முன்னோடி காளமேகப் புலவர். இவரின் பாடல்களில் நேரடியாகப் பொருள்களைப் பெறுவதை விட மறைமகமாகவே பெற இயலும். இவரின் பாடல்களில் புதிர்கள் நிறைந்திருக்கும். இந்தப் புதிர்களுக்குள் வாழ்வின் உண்மைகள் ஒளிந்திருக்கும்.

இதோ அவரின் இனிய பாடல் ஒன்று;

“பண்புளருக்கு ஓர் பறவை. பாவத்திற்கு கோர் இலக்கம்
நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள்வாகனம் நன்னிலம்”

என்பது அவரின் பாடலாகும்.

இந்த நான்கு அடிப்பாடலில் நான்கு செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன.

பண்புளருக்கு ஓர் பறவை என்ற அடியில் ஒளிந்திருப்பது ஈ என்ற பறவை. பண்புள்ளவர்களுக்கும் ஈக்கும் என்ன தொடர்பு. நல்ல பண்புகளைப் பெற்றவர்களுக்குப் பொருள்களைக் கொடுக்கவும். அதாவது ஈயவும் என்பதையே பண்புள்ளவர்களுக்கு ஓர் பறவை என்று புதிர் வைக்கிறார் காளமேகம்.

பாவத்திற்கு ஓர் இலக்கம். பாவத்திற்கும் இலக்கத்திற்கும் என்ன சம்பந்தம். இணைக்க முடியாதவற்றை இணைப்பவன் கவிஞன். இணைப்பது கவிதை. பாவத்திற்கும் எண்ணுக்கும் என்ன தொடர்பு. பழி, பாவத்திற்கு அஞ்சு. அதாவது பழி பாவம் செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதைத்தான் பாவத்திற்கு ஒர் இலக்கம் என்று புதிராக்குகிறார் காளமேகம்.

அடுத்து நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி. போலி நட்புடையவர்களை நாற்காலியில் அமர வைக்கவேண்டுமா? ஐயையோ அது சரியா என்று எண்ணலாம். நாற்காலி என்றால் என்ன பொருள். இருகாலி மனிதன், பறவை. நாற்காலி யானை புலி போன்ற விலங்கு. நாற்காலி என்பதற்கு விலங்கு என்று பொருள் கொள்ளவேண்டும். இப்போது நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி என்பது புரியவரும். நண்பில்லாதவரைக் கண்டால் விலகி விடவேண்டும் என்பதே இந்தப் புதிர்.அடுத்த அடி இன்னும் அதிக பொருள் வளம் கொண்டது. சொக்கர்க்கு அரவம் நீள் வாகனம் நன்னிலம் என்பது நிறைவடி. இதில் அரவம் என்றால் பாம்பு என்றுதானே பொருள் கொள்ளுவோம். இந்தப் பாடலுக்கு அரவம் என்பதைப் பணி என்று பொருள் கொள்ளவேண்டும். சொக்கருக்கு எது வாகனம். விடை என்ற காளை. பணிவிடை என்பதை அரவம், வாகனம் என்ற இரண்டு சொற்கள் வழியாகப் பெற்றுக்கொண்டோம். நன்னிலம் என்பது செய் நிலம் என்று இலக்கியங்களால் குறிக்கப்படும். பணவிடை செய் என்பதை அரவம், வாகனம், நன்னிலம் ஆகிய சொற்கள் கொண்டு வருவித்துக் கொள்கிறார் காளமேகம்.

காளமேகம் பாடல்களில் பூட்டும் இருக்கும். சாவிகளும் இருக்கும். பூட்டைச் சரியான சாவிகளால் திறந்து மறைந்து இருக்கும் பொருளை உணர்ந்து கொள்ளவேண்டும். இது படிப்பவருக்கு சாவால். படைப்பவரின் வெற்றி.

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்

Siragu raamaanujar1
நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர் திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் அமுதனார் என்பதே இவர் பெயராக அமைந்தது. திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து திருவரங்க அமுதனார் ஆனார்.
இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில் நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார் இராமானுஜர். இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத் தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.
இந்நூலில் இராமானுசரின் பணிகள், பெருமைகள், வைணவத் தொண்டு ஆகியனவும், தனக்கும் இராமானுஜருக்குமான தொடர்பின் வலிமையையும் திருவரங்கத்து அமுதனார் எடுத்துரைத்துள்ளார். இப்பாடல்கள் வழியாகப் பெறப்படும் இராமானுஜர் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
திருவரங்கத்து அமுதனார் திருவரங்கம் கோயிலின் வழிபாட்டு முறைகளை மேற்பார்வையிடும் பணியில் இருந்தவர். இவரின் போக்கு சரியில்லாத நிலைக்கு வந்தபோது இராமானுஜர் இந்நிலை கண்டு வருந்துகிறார். கோயில் நிர்வாகங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமுதனாரைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் இராமானுஜரை மறுத்து தன் போக்கிலேயே திருவரங்கத்து அமுதனார் கோயில் நிர்வாகத்தைச் செய்கிறார். இதனைக் கண்டு பொறுக்க இயலாமல் காஞ்சிபுரம் சென்றுவிட கூரத்தாழ்வரை அழைக்கிறார் இராமானுஜர். அப்போது கூரத்து ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரைத் தான் திருத்தி நல்வழிப்படுத்துவதாக உரைக்கிறார். கூரத்தாழ்வான் மெல்ல மெல்ல இராமானுஜரின் பெருமைகளை எடுத்துரைத்து, அவரின் சீர்திருத்தங்களின் தேவைகளை உணரவைத்து, திருவரங்கத்து அமுதனாரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக திருவரங்கக் கோயிலொழுகு முறை இராமானுஜர் வசம் வருகின்றது. எண்ணிய சீர்திருத்தங்களை இராமானுஜர் செய்கிறார். இவருக்கு இயற்பாவை ஆண்டவன் முன்னிலையில் சேவிக்கும் பணி தரப்பெறுகிறது. இதனை முழுமனதுடன் செய்கிறார் திருவரங்கத்து அமுதனார்.
இவ்வகையில் இவர் தன்னைத் திருத்திய இராமானுஜரையும், கூரத்து ஆழ்வானையும் குரு நிலையில் வைத்துப் போற்றுகிறார். இதனைப் பின்வரும் நிலையில் இவரின் அந்தாதிப் பாடல் உரைக்கின்றது.
“மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத் தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே!” (3899)
என்ற பாடலில் தன் குரு இருவரையும் போற்றுகிறார் திருவரங்கத்து அமுதனார். கூரத்தாழ்வான் தான் உயர்ந்த குலத்தவர் நிறைய படித்தவர் ஒழுக்கத்துடன் வாழ்வை நகர்த்துபவர் என்ற மூன்று குணங்களுக்கு உரியவர் என்றபோதும், இவற்றால் மமதை பெறாதவர் என்று சொல்லி இப்பாடலில் அவரை வணங்குகிறார். இராமனுஜரின் வழிகாட்டுதலின்படி தான் நடப்பதால் எந்த வருத்தமும் தன்னை அணுகாது என்று இராமானுஜரையும் இப்பாடலில் போற்றுகிறார். இவ்வகையில் தன்னை நல்வழிப்படுத்தியோரை வணங்கி, குருபக்தி மிக்கவராக திருவரங்கத்து அமுதனார் விளங்குகிறார்.
தான் இராமனுஜருடன் முரண்பட்டுப் பின் சரண் அடைந்த நிலையை மற்றொரு பாடலிலும் குறிக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.
“என்னையும் பார்த்து, என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கிலருள் செய்வதே நலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை
தன்னை என் பார்ப்பார்? இராமாநுச உன்னைச் சார்ந்தவரே” (3962)
என்ற இப்பாடலில் திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரோடு முரண்பட்ட தன்மை தெரிகிறது. என்னையும் ஒரு பொருளாக மதித்து என்னை வழிப்படுத்தியவர் இராமானுஜர். என்னுடைய இயல்புகளையும் அவர் கண்டுள்ளார். பல நற்குணங்களை உடைய இராமானுஜருடன் எனக்கேற்பட்ட இத்தொடர்பினை அறியும்போது என்னிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருப்பதால்தான் இது நடைபெற்றது என்பதை உணரமுடிகின்றது. இப்பாடலின் கருத்தில் மறைமுகமாக தன் செயல்களுக்கு வருந்தியுள்ளார் திருவரங்கத்து அமுதனார்.
இராமானுஜரின் சிறப்புகளையும் அவரின் நூற்சிறப்புகளையும், அவரின் கொள்கைகளையும் எடுத்துரைப்பதாகவும் இராமானுச நூற்றந்தாதி விளங்குகிறது.
“தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே” (3922)
மண்ணில் தோன்றிய பல்லுயிர்கட்கும் தலைவனாக அமைபவன் மாயன் என்ற திருமால் என்று தன் பாஷ்ய உரையில் அறிந்து உரைத்தவர் இராமனுஜர் என்று அவரின் நூற்சிறப்பினை இப்பாடல் காட்டுகிறது.
மேலும் பாஷ்யத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை
“சேமநல் வீடும், பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” (3932)
என்ற பாடலில் அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்ற நான்கில் கண்ணன் மீது காமம் வைத்து மற்ற மூன்றையும் அவனிடத்திலே விட்டு நிற்கவேண்டும் என்று தன் பாஷ்ய உரையில் உரைத்தவர் இராமானுஜர் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
மனிதர்களுக்கு உடல் உறுப்புகளை ஆண்டவன் படைத்ததற்கான காரணத்தை மற்றொரு பாடல் குறிக்கிறது.
“சரணமடைந்த தருமனுக்காப்பண்டு நூற்றுவரை
மரணமடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணமிவையுமக் கன்றென்றி இராமானுசனுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல் அரணார் மற்றில் வாருயிர்க்கே” (3959)
என்ற பாடலில் மனிதர்க்கு உடல் உறுப்புகள் தரப்பெற்றதற்கான காரணம் இறைவனை வணங்கிச் சேவை செய்வதற்காகவே என்ற கருத்து உரைக்கப்படுகிறது. பாஷ்ய உரைக் கருத்தாக விளங்கும் இதனையும் இந்நூல் காட்டுகிறது.
இவ்வகையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில் இராமானுச நூற்றந்தாதியும் இணைந்து இராமானுசரின் புகழை, வைணவத் தொண்டினை ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்குத் தொடர்ந்து அமைவதாகக் காட்டியுள்ளது.

நன்றி- சிறகு இணைய இதழ்

திங்கள், ஆகஸ்ட் 07, 2017

முல்லைப்பாட்டில் காணலாகும் மேலாண்மைச் செய்திகள்Siragu mullai paattu1
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைச் சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மக்களைக் கொண்டு ஓர் அமைப்பு தன் நோக்கத்தை வெற்றிகரமாக அடையும் செயல்திட்டம் மேலாண்மை என்ற பொதுக்கருத்தை இவ்விரு அறிஞர்களின் கருத்துகள் வழியாகப் பெறமுடிகிறது.
மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மைத் தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில், இலக்கியங்களில் பல மேலாண்மைக் கூறுகள் அமைந்துகிடப்பதை இன்றைக்கு அறியமுடிகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன. பண்டை இலக்கியமான சங்க இலக்கியங்களில் பல மேலாண்மைக் கருத்துகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முல்லைப்பாட்டில் காணப்படும் மேலாண்மைக் கூறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முல்லைப்பாட்டு
போர் இலக்கியமாகத் திகழ்வது முல்லைப்பாட்டு ஆகும். போர் கருதி பிரிந்த தலைவனை எண்ணித் தலைவி வருத்தமுற்றுக் காத்திருக்கும் கற்பு முறைமையைக் காட்டுவது முல்லைப் பாட்டின் பாடுபொருள் ஆகும். இதனை எழுதியவர் நப்பூதனார். இவர் அகமரபினைப் பின்பற்றி முல்லைப்பாட்டினை எழுத வந்தாலும் அதனுடன் பல புற மரபுகளையும் இணைத்துப் படைத்துள்ளார். இப்புற மரபுகள் அரசன், அரசன் சார் பணியாளர்கள், அவர்கள் தம் இருக்கை, பணி போன்றனவற்றை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. அகமரபும் புறமரபும் இணைந்த நிலையில் காணலாகும் முல்லைப்பாட்டில் இரு பாடுபொருள்களுக்குமான சமத்தன்மை நிலைப்படுத்தப்பெற்றுள்ளது.
முல்லைப்பாட்டினை மையமாக வைத்து அக்கால நிலையில் ஓர் அரசனின் பாடி வீடு எப்படி இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. மேலும் அரசனின் நிர்வாகம், போர் நடைமுறை முதலானவற்றையும் இவ்விலக்கியம் வழி அறியமுடிகிறது.
பாடி வீடு
பாடி வீடு என்பது அரசனும் மற்றோரும் படைஞரும் தங்குவதற்காக அமைக்கப்பெறும் வீடு ஆகும். ஓரளவு வசதிகள், கடுமையாக பாதுகாப்பு அரண் ஆகியன கொண்டு விரைவில் கட்டி முடிக்கப்படும் தன்மை வாய்ந்தது இந்தப் பாடிவீடு ஆகும். இதனைக் கட்டக் கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக படைவீரர்களே இதனை வடிவமைப்பார்கள்.
பாடி வீடு அமையப் பெற்ற இடம் ஓர் ஆற்றின் கரையாக விளங்குகிறது. ஆற்றின் அருகில் இருக்கையை அமைப்பது என்பது முக்கியமான இட நிர்வாகச் சிறப்பாகும். இக்கரையைச் செதுக்கி, சமப்படுத்தி, புதர்களை ஒழங்குபடுத்தி, பிடவச் செடிகளை வீழ்த்தி இப்பாடிவீடு அமைக்கப்பெற்றது. இந்த இடத்தை முதலில் வேடர்கள் தம் இருப்பிடமாக வைத்து வேட்டை நடத்தி வந்துள்ளனர். இந்த இடத்தில் தற்போது பாடி என்ற பாசறை அமைக்கப்பெற்றுள்ளது. இந்தப் பாடி வீட்டிற்குப் பாதுகாவலாக முட்களை வளைத்துக் கட்டியுள்ளனர். இதனை முல்லைப்பாட்டு பின்வருமாறு குறிக்கிறது.
“கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேணாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி” (முல்லைப்பாட்டு 24-28)
என்ற இந்த விவரிப்பு பாடி வீட்டின் அமைப்பினைக் காட்டுவதாக உள்ளது.
இந்தப் பாடிவீட்டைச் சுற்றிலும் அரண் அமைக்கப்பெற்றுள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வில் போன்ற போர்க்கருவிகளை நட்டு, அவற்றில் கயிறுகளைக் கட்டி, அவற்றில் திரைகளைத் தொங்கவிட்டு அவ்வீடு அமைக்கப்பெற்றிருந்தது. நடுநடுவே வேல்கள், கேடயங்கள் நிறுத்தப்பெற்றிருக்கின்றன.
பாடிவீட்டின் பக்கங்களில் விளக்குகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. அரசன் பாடி வீட்டின் மையப் பகுதியில் பல வீரர்களின் இருக்கைகளுக்கு நடுவில் ஒரு கூடாரத்தில் தங்கி இருக்கிறான். அவன் தங்கியுள்ள அறை இரு பகுதிகளை உடையதாக உள்ளது.
அரசனின் இருக்கையை பாதுகாவலர்கள் காத்துவருகின்றர். அவர்கள் குதிரைச் சவுக்கினை இடுப்பில் கட்டியிருக்கின்றனர். அதன்மேல் சட்டை அணிந்துள்ளனர். இவர்கள் கண்ணும் கருத்துமாகக் காவல் பணியைச் செய்துவருகின்றனர். இவ்வளவு நயமுடையதாகப் பாடி வீடு அமைக்கப்பெற்றிருந்தது.
அரச சுற்றம்
Siragu-mullai-paattu4
அரசனைச் சுற்றிலும் பலர் குழுமியிருப்பர். நாடாக இருந்தால் அமைச்சர், எண்பேராயம், ஐம்பெருங்குழு ஆகியோர் இருப்பர். இது பாடி வீடு என்ற காரணத்தினால் பொழுதறிந்து கூறுவோர், யானை வீரர்கள், மெய்க்காப்பாளர்கள், காவலர்கள், தீபமிடும் பெண்கள் என்று பலரும் குழுமியுள்ளனர். இவர்களின் இயல்புகளும் முல்லைப்பாட்டில் சுட்டப்படுகின்றன.
இத்தகைய நிர்வாக முறைமை “வளங்களை நிர்வகித்தல்” (Allocation of resources) என்ற வகைமையின் பாற்படுகிறது. “இருக்கும் வளங்களுக்கும் அளவுண்டு. ஓரளவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வளங்களை, தலைவன் மிகச்சிறந்த பலன் தரும் வகையில் பங்கீடு செய்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வளங்களை நிர்வகித்தல் எனப்படுகிறது” (சோம. வள்ளியப்பன், எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம்,ப. 77). புதிதாக வந்துப் பாடி வீடு அமைத்த இடத்தில் கிடைத்த வளங்களைத் தன் வசதிக்கேற்ப பயன்படுத்தி அரசன் நிர்வகித்துக் கொள்கிறான். நீர் இருக்கும் இடத்தில் பாடிவீடு அமைக்கிறான். அதன் மையத்தில் இருஅறைகள் கொண்ட தலைவனுக்கான இடமாக அமைத்துக்கொள்கிறான். மற்றவர்கள் சூழ்ந்திருக்க பாடி வீடு அமைக்கப்படுகிறது. உடைத்த போர்க்கருவிகள் உபயோகமற்றவை என வீசப்படாமல் அவற்றைக் கொண்டு அரண்களை அமைத்துக்கொண்டான். இதன் காரணமாக வளங்களை நிர்வகிக்கும் தன்மை சங்க காலத்தில் இருந்தது என்பது உறுதியாகின்றது.
“கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப நற்போர்
ஓடாவல்வில் தூணி நாற்றிக்
கூடங் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப்
பூந்தலை குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து
வாங்குவில் அரணம் அரணம் ஆக” (முல்லைப்பாட்டு,37-43)
என்று உடைந்த பொருள்களை வைத்துப் பாடி வீடு அமைக்கப்பெற்ற முறைமை முல்லைப்பாட்டில் காட்டப்பெறுகிற:து. திருமணி விளக்கம் காட்டித் திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளி (முல்லைப்பாட்டு, 63-64) என்ற கவித்தொடர் மன்னன் இருந்த அறையின் சிறப்பினை; காட்டுகிறது. விளக்கு மன்னனின் சார்பு பெற்றதால் திருமணி விளக்காகின்றது. இவ்வகையில் இருப்பதைக் கொண்டு வசதிபட அமைத்துக்கொள்ளும் நடைமுறை இங்குப் பின்பற்றப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது.
அரசனின் தலைமைப்பண்புகள்
Siragu-mullai-paattu3
முல்லைப்பாட்டின் தலைவனாக விளங்கும் அரசன் தலைமைப் பண்பு மிக்கவனாக விளங்குகிறான்;. “தலைமை என்பது ஒரு பதவி அல்ல. அது ஒரு பொறுப்பு. தலைமைக்கு என்று சில தகுதிகள் உண்டு. நியமிக்கப்படுபவர்கள் முறைமையால் வந்த தலைவர்கள் ஆகிறார்கள். தானாக உருவாகிறவர்கள், மற்றவர்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் முறைமை மீறி வந்தத் தலைவர்களாகின்றனர்” (முன்னது,ப. 25) என்று தலைவர்களுக்கான வகைமைகள் விளக்கப்படுகின்றன. முறைமையால் வந்த தலைவன் முல்லைப்பாட்டின் அரசன் ஆவான். ஆனால் அவன் தலைமுறை தலைமுறையாக அரச மரபினை அறிந்து வளர்ந்திருக்கிறான். இதன் காரணமாக அவனுக்குப் போர்க்காலத்தில் மேலாண்மையைச் செய்து கொள்ள முடிகின்றது.
“இலக்கு நிர்ணயிக்க, திட்டமிட, ஒருங்கிணைக்க, ஊக்கம் தர, வழி நடத்த, கட்டுப்படுத்த என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து இருக்கும் இடங்களில் எல்லாம் தலைவர் தேவைப்படுவார்” (முன்னது, 24) என்று தலைவரின் தேவையை மேலாண்மை அறிஞர்கள் வரையறுக்கின்றனர். போர் நடத்த, போர் வீரர்களை ஒருங்கிணைக்க, போரின் வெற்றி, அழிவு போன்றவற்றைக் கணக்கிட அரசனின் தலைமைப்பண்பு உதவி செய்கின்றது.
ஒரு தலைவனுக்கு அழகு வேலைகளைப் பிரித்தளித்தல், ஜனநாயகப் பண்புடன் இருத்தல், தனித்து முடிவு எடுத்தல் என்பனவாகும். இப்பண்புகளைப் பெற்றவனாக முல்லைப்பாட்டின் தலைவன் அமைந்துள்ளான். வெற்றிக்குப் பல சொந்தக்காரர்கள். தோல்வி ஒரு அனாதை என்பது நிர்வாக வழக்கு. தோல்வி அல்லது வெற்றி நடந்துவிட்டபின் அது யாரால் ஏற்பட்டது என்பதைத் தன்னைத் தாண்டி யோசிப்பதுதான் இயல்பு இந்நிலையில் முல்லைப்பாட்டின் தலைவன் வெற்றி பெறுகிறான். வெற்றி பெற்றபின் அவன் அவ்வெற்றியைத் தொடர்ந்துப் பலவகைகளில் சிந்திக்கிறான். இதனை முல்லைப்பாட்டு வெளிப்படுத்துகிறது.
“மண்டமர் நசையொடு கண்படை பொறஅது
எடுத்தறி எஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத்
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச்
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல்துமிபு
வைந்நுனைப் பகழிமூழ்கலிற் செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்” (முல்லைப்பாட்டு- 67-74)
என்ற நிலையில் தலைவனின் சிந்தனை அமைகிறது. தலைவன் உறக்கம் வராமல் பஞ்சணையில் படுத்திருக்கிறான். அவனின் நினைவுகள் போர்க்கள நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. வேல்களால் புண்பட்ட ஆண் யானைகளையும், தும்பிக்கை அறுபட்டுத் துயர்பட்ட பகைவரின் யானைகளையும் எண்ணி எண்ணி அவன் மனம் துன்பப்படுகிறது. மேலும் தன் இட்ட சோற்றுக்காகச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இறந்த படை வீரர்களை எண்ணியும் அரசனின் மனம் துன்பமடைந்தது. குதிரைகள் மேல் வேல்பட்ட காரணத்தால் அதன் வலியால் புல் உண்ணாமல் நிற்கும் குதிரைகள் அரசனின் மனதில் வருத்தத்தைத் தந்தன. இக்குறிப்புகள் அரசன் போரின் நினைவுகளினால் சூழப்பெற்றிருப்பதை வெளிப்படுத்துகிறது. அடுத்தநாள் திட்டமிடலுக்கு இந்நினைவுகள் அரசனுக்குத் துணைசெய்கின்றன.
அவனின் சிந்தனை கொண்ட மனத்தினைப் பின்வரும் கவியடிகள் படம் பிடித்து நிற்கின்றன.
“ஓருகை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து” (முல்லைப்பாட்டு 975-76)
என்ற அடிகள் அரசனது சிந்தனை நிலையை எடுத்துரைக்கின்றன. ஒருகையைத் தலையில் வைத்துக் கொண்டு ஒருகையை பஞ்சனையில் வைத்துச் சிந்தனை வயப்பட்டு அரசன் இருந்தான் என்று முல்லைப்பாட்டு கூறுகிறது. இரவுப் பொழுதில் அரசன் அன்றைய நடப்புகளை மீள்பார்வை செய்துள்ளான் என்பதை இப்பகுதி காட்டுகின்றது.
“பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல்
நகைதாழ் கண்ணி நல்வலந்திருத்தி
அரசிருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன்துயில் வதியுநன் காணாள் துயருழந்து” (முல்லைப்பாட்டு 75-80)
பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல் என்பதே அடையப்பட வேண்டிய இலக்காகும். அதாவது தான் பகைவரை வெல்வேன் என்று சொன்ன சூளுரை அடையப் பட வேண்டிய இலக்காக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது. இதற்கான திட்டமிடலை அரசன் தொடங்கிவிட்டான். அதனை அடைவதற்கு அவன் நாள்தோறும் திட்டமிடுகிறான்.
இவ்வகையில் முல்லைப்பாட்டின் தலைவன் போர் என்ற தன் செயல்பாட்டினை தக்க முறையில் நடத்திச் செல்லும் திறன் வாய்ந்தவனாக உள்ளான்.
வீட்டையும் நிர்வகிப்பவன்
Siragu-mullai-paattu2
போர்க்களத்தையும், போர் வீரர்களையும் நிர்வகித்த முல்லைப்பாட்டின் அரசன் வீட்டையும் திறம்பட நிர்வகிப்பவனாக உள்ளான். இவனின் வருகையை எதிர்நோக்கித் தலைவி காத்திருக்கிறாள். கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று சொன்ன தலைவன் தன் சொல் பிழையாது சரியான காலத்திற்கு அரண்மனை திரும்புகிறான்.
“எதிர் செல் வெண்மழை பொழயும் திங்களின்
முதிர்காய் வள்ளியங் காடு பிறக்கும் ஒழியத்
துனைபரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந்தேர் பூண்டமாவே” (முல்லைப்பாட்டு 100-103)
என்ற நிலையில் தலைவன் திரும்பி வரும் காட்சி முல்லைப்பாட்டில் காட்டப்பெறுகிறது. ஆறாக் காதலை உடைய தலைவி கடமை தவறாத தலைவன் இவர்களின் ஒப்பற்ற இணைவில் முல்லைப்பாட்டு இல்லறம் சிறக்கின்றது. சிறந்த திட்டமிடல், சிறந்த தலைமை, சிறந்த துணைமை என்ற நிலையில் நிர்வாகக் கூறுகளைக் கொண்ட தமிழ் இலக்கியமாக முல்லைப்பாட்டு விளங்குகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

இலக்கியத்தின் பயன்


இலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும்? என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம்.

* இலக்கியத்தைப் படிப்பதனால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

* படிப்பவர் உள்ளம் பண்படுகிறது.

* நடுக்கம் நீங்கி அமைதி ஏற்படுகின்றது.

இவ்வாறு பதில்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு இலக்கியமும் மனிதனை உயர்வினை நோக்கி அழைத்துச் செல்லவேப் படைக்கப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. இலக்கியங்கள் அரியதானவற்றை அறிவிக்கின்றன. இலக்கியச் செல்வங்களை இன்று நூல்களின் வடிவில் தரிசிக்கிறோம். நூல்களைப் படிக்கும்போது அறிவு விரிவாகின்றது. நூல்களைத் திறக்கும்போது அறிவின் வாயில்களில் நாம் நிற்கிறோம். அவற்றை வி;ட்டுப் பிரிய மனமில்லாமல் பிரியும் போது நூல்களின் பக்கங்கள் நமக்காகக் காத்து நிற்கின்றன. திறக்கும் போது மகிழ்வையும், மூடும் போது நெகிழ்வையும் தருவன நூல்கள். நூல்கள், படிப்பு, பயன் என்று மனிதனைச் சுற்றி அறிவு என்னும் முழுவட்டம் அமைந்துவிடுகிறது.

இலக்கியத்தைப் படிப்பதனால் ஏற்படும் பயன்களை இலக்கணங்கள் பட்டியல் இடுகின்றன.

பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைத் தருவன இலக்கியங்கள் என்கிறது நன்னூல். அறம்,பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தருவது காப்பியங்களின் பயன் ஆகிறது. கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நாற்றாள் தொழுதல் என்கிறது வள்ளுவம். வீரசோழியம் என்ற நூல் இலக்கியத்தைப் படிப்பதனால் இருபதிற்கும் மேற்பட்ட பயன்கள் கிடைக்கின்றன என்கிறது.

தமிழின் ஐந்து இலக்கணங்களைப் பற்றி எழுதப்பெற்ற நூல் வீரசோழியம். இதனை எழுதியவர் புத்தமித்திரனார்.


எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் என்று ஐந்துவகை இலக்கணங்களைத் தன் காலத்திற்கு ஏற்ப வரையறுத்துநிற்கிறது வீரசோழியம் .

வீரசோழிய பொருளதிகாரத்தில் காதல், வீரம் ஆகிய இரு பாடுபொருள்களுக்கும் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. காதல் பாடல்கள் இருபத்தேழு கூறுகளை வெளிப்படுத்துவனவாக இருக்கவேண்டும் என்கிறார் வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரன்.

சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடன், கிளவி, கேள்வி, எச்சம், இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு என்று இருபத்தேழு நிலைகளுக்கு உடையதாக காதல் பாடல் பாடப்படவேண்டும்.

இந்த இலக்கண மரபின்படி ஒரு புலவன் காதல் பாடலை எழுதுவது என்பது எத்தனை கடினம். காதல் பாடல் எழுதுவது - மானிடருக்கு வரும் காதல் உணர்வினைக் காட்டிலும் கடினமானது என்பது மட்டும் இந்த இலக்கண வரம்பினைப் படிக்கும்போது தெரியவருகிறது. கண்ணிமைக்கும் நொடிக்குள் காதல் வந்துவிடும் என்ற அனுபவசாலிகள் பலர் இருக்கலாம். ஆனால் காதல் பாடலை எழுதுவது என்பது பல நொடிகளைச் செலவழித்து எழுத வேண்டியது என்பது மட்டும் உண்மை.

ஒரு காதல் பாடல் எழுதுவதற்குப் பல்வேறு இலக்கணக் கூறுகள் தேவைப்படுகின்றன. எம்மொழியிலும் இல்லாத அளவில் தமிழ் மொழியில் காதல் பாடல்கள் பாடுவதற்கான வரையறை வகுக்கப்பெற்றுள்ளது. காதல் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய இலக்கண நிலைகளில் ஒன்றுதான் பயன் என்பது. காதல் பாடலினால் என்ன என்ன பயன் விளைந்துவிட இயலும்.

இதற்குப் பதில் சொல்கிறது வீரசோழியம்.

“பயன் எனப்படுவது நயனுறக் கிளப்பின்
வழிபாடு, அன்பே, வாய்மை, வரைவே
விழையா நிலைமை, பெருமை, தலைமை
பொறையே போக்கே புணர்வே மயக்கே
நிறையே எச்சம் நேச நீர்மை
ஐயம் அகறல் ஆர்வம் குணமே
பையப் பகர்தல் பண்பே சீற்றம்
காப்பே வெறியே கட்டு நேர்தல்
பூப்பே, புலப்பே, புறையே புறைவியெனப்
பாற்பட இன்னவை பயத்தலாகும்”

காதல் பாடலினால் கிடைக்கும் பயனும் 27 என்கிறார் வீரசோழிய ஆசிரியர்.


காதல் பாடலினால் ஒருவரை ஒருவர் மதிக்கும் முறைமை கிடைக்கப் பெறுகிறது. உண்மை வெளிப்படுகிறது. திருமணம் கைகூடுகிறது. தலைவனின் பொருள் வேண்டாமல் அன்பு வேண்டும் நிலைமை வெளிப்படும். தலைவன் தலைவியின் பெருமை, தலைமைப் பண்பு, பொறுமை முதலிய குணங்ள் வெளிப்படும். தலைவன் தலைவியின் பிரிவு, இணைவு ஆகியவற்றை உணர்த்தும் நிலையில் பாடல்கள் அமையலாம். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மயக்கமும் வெளிப்படலாம்.

ஒருவரைப் பற்றிய முழுமையான குணங்கள், பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை முதலியன் வெளிப்படலாம். ஒருவர் மீது வைத்துள்ள சந்தேகம் தீரலாம். ஆர்வம், குணம், மெதுவாகப் பேசுதல், பண்பு, கோபம், காப்பு, அன்பின் மிகுதி, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கட்டுமானம், சிறு சண்டை, வெளிப்படல், வெளிப்பட்டு வாழ்தல், தன் வளர்ச்சியை வெளிப்படுத்தி நிற்றல், மீதமுள்ளவை போன்றன காதல் பாடல்களில் குறிப்பிடப்படவேண்டும் என்கிறது வீரசோழியம்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. இலக்கியங்கள் பயன் கருதி எழுதப்பெற்றுள்ளன.

இலக்கியத்தினால் கிடைக்கும் பயன் ஒன்றல்ல. இரண்டல்ல 27 என்கிறது வீரசோழியம்.

காதல் பாடல்களுக்குச் சொல்லப்பட்ட இந்த இலக்கணத்தை இலக்கியத்திற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்ள இயலும். ஓர் இலக்கியத்தைப் படிப்பதனால் உண்மை தெரியவரும். பெருமை, நிறை, பண்பு பொறை போன்ற குணங்கள் இலக்கியப் படிப்பால் கிடைக்கப்பெறும். ஐயம் அகலும். ஆர்வம் தோன்றும். ஒருவரை ஒருவர் மதிக்க இயலும். எனவே இலக்கியம் படிப்பதும் படைப்பதும் மனிதர்களை ஒருநிலையில் இருந்து மெல்ல மெல்ல அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் வாழ்க்கை முறையாகும்.

தொல்காப்பியம் தொகுநிலைக் கிளவி பயன் என்கிறது. அதாவது தொகுத்துச் சொல்லும் முறைமையைப் பயன் என்று உரைக்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட ஒரே ஒரு பயனை விரிவாக்கிறது வீரசோழியம்

இன்னும் இன்னும் பயன்கள் விரியும். நல்ல இலக்கியங்கள் மலரும். நாளும் மனித மனம் அன்பால்,பெருமையால். பொறுமையால் மேன்மை நிலை பெறும்.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

பிழைதிருத்திகள்Siragu tamil in computer2
தற்காலத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நிற்பது கணினித் துறையாகும். தமிழில் எழுதுவது என்பது குறைந்து நேரடியாக கணினி அச்சாக்கம் செய்யும் நிலையில் தமிழின் படைப்புகள் கணினியுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு விளங்குகின்றன. எழுதுவது, அழகுபடுத்துவது, வெளியிடுவது என்று அனைத்து நிலைகளிலும் கணினியின் பயன்பாடு தமிழுக்கு மிக நெருக்கமாக அமைந்துவருகிறது. இந்நிலையில் கணினியின் வேகம், அதன் இயந்திரத்தன்மை, உள்ளிடும் நிலையில் ஏற்படும் கைபிசகல்கள், ஆகியன கருதி சில பிழைகளும் நேர்ந்துவிடுகின்றன. இந்தப்பிழைகளைக் களைந்து நலமான தமிழை வெளியிட தேர்ந்த பிழைதிருத்தி மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இத்தேவை பெரிதும் உணரப்பெற்று வந்தாலும், இத்தேவையை முழுவதுமாக அமைத்துக்கொள்ள இயலவில்லை.
எம்.எஸ் வேர்டு என்ற சொல் செயலி வழியாகத்தான் தமிழை உள்ளிடுவதும் வெளியிடுவதும் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இச்சொல் செயலி ஆங்கில சொல், தொடர் பிழைகளை வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் கொண்டு – தமிழ்ச் சொல், தொடர் பிழைகளை நீக்க இயலாது. எனவே இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது சிற்சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கிடைத்துவருகின்றன. சந்திப்பிழைகளைக் களைய நாவி, எழுத்துப்பிழைகளைக் களைய வாணி சொற்திருத்தி ஆகியன ஓரளவிற்குப் பிழைகளைத் திருத்தி உதவுகின்றன. தெய்வசுந்தரம் அவர்கள் வடிவமைத்துள்ள மென்தமிழ் (அம்மா மென்பொருள்)  சொல் செயலியாகச் செயல்படுகிறது. இதனுள் பல வசதிகள் உள்ளன. இருப்பினும் ஒரு முமுமையான பிழை திருத்தி தமிழ்க் கணினி உலகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. தற்போது கிடைத்துவரும் பிழைதிருத்திகள் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரையாக இக்கட்டுரை அமைகிறது.
வாணி (சொல்திருத்தி)
Siragu pizhaithiruththi1
தமிழ் சொற்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள வாணி (http://vaani.neechalkaran.com/) என்ற மென்பொருள் பெரிதும் உதவுகின்றது. இம்மென்பொருளில் ஒருங்குறி எழுத்துரு உள்ளீடுகள் மட்டுமே திருத்த இயலும்.  நேரடியாகவும் உள்ளீடு செய்து பிழை திருத்திக் கொள்ளலாம். அல்லது வெட்டி ஒட்டியும் பிழை திருத்திக்கொள்ளலாம். ‘“வாணி எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்க நான்கு வருடம் ஆகிவிட்டது. வார்த்தைகளைத் திருத்துவதற்காக இதை வடிவமைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; இது முந்நூறுக்கு மேற்பட்ட பிறமொழிச் சொற்களைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்தப் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கும்” என்று நீச்சல்காரன் (ராஜாராமன்) இச்சொல் திருத்தி பற்றி உரைக்கின்றார்.
வாணி சொல் திருத்தி வழியாக இரண்டாயிரம் சொற்களை ஒரே நேரத்தில் திருத்திக் கொள்ள இயலும். இந்த அளவிற்குமேல் சொற்கள் உள்ளிடப்படும் நிலையில் அதனை இம்மென்பொருள் ஏற்காது. மேலும் இதனுள் மூன்று சுட்டிக்காட்டல் அமைந்திருக்கிறது. அடிக்கோடு, சிவப்பெழுத்து, பச்சையெழுத்து ஆகியன அவையாகும். அடிக்கோடு என்பது திருத்தும் சொல்பட்டியலில் சொல் இல்லை என்ற அடையாளத்தைக் குறிக்கிறது. சிவப்பெழுத்து என்பது பிழையான சொல்லைக் காட்டி அதற்கு மாற்றாக பிற பரிந்துரைச் சொற்களைத் தரும். பச்சையெழுத்து தானாகத் திருத்திக்கொள்ளும் தன்மை பெற்றது. அதாவது இந்தச்சொல் தவறு என்பதை இது உறுதிப்படுத்தும். இம்மென்பொருள் வழியாக சொற்பிழைகளைக் கண்டறியமுடியம் என்பதே நல்ல வெற்றி. பிழையான சொற்களைக் கண்டறிந்துவிட்டால் அதனைத் திருத்திக்கொள்வது எளிமை என்ற நிலையில் இம்மென்பொருள் உதவிகரமாக அமைகின்றது.
நாவி (சந்திப்பிழைதிருத்தி)
Siragu pizhaithiruththi2
தமிழில் நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டில் தொடர்பில் சில இணைப்புகள் சில திரிபுகள் அமையும். அவற்றைச் சந்தி என அழைப்பது முறை. அந்தச் சந்திப்புகளில் ஏற்படும் பிழைகளைத் திருத்திக் கொள்ள நாவி என்ற மென்பொருள் பயன்படுகிறது. http://dev.neechalkaran.com/p/naavi.html#.WVr6hcbhXIU இதன்வழியாக மரபுப்பிழை, சந்திப் பிழைகளை ஓரளவு இனம் கண்டு களைய முடிகின்றது. இதுவும் ஒருங்குறி எழுத்துரு உள்ளீட்டை மட்டுமே ஏற்கிறது. இதனுள்  பச்சை வண்ணம், சிவப்பு வண்ணம், நீல வண்ணம் ஆகியன பயன்படுத்தப்பெற்றுள்ளன. பச்சை வண்ணம் என்பது சந்தேகத்திற்கு இடமானது. சந்தியில் ஒற்று மிகும் மிகாது என்பதை ஆய்ந்தறியவேண்டும். சிவப்பு வண்ணமானது ஒற்றுப் பிழையைச் சுட்டுவது. நீலம் மரபுப் பிழையைச் சுட்டுவது. இதன் வழி சந்திப் பிழைக்கான இடங்களைத் தேர்ந்து கொள்ள முடிகின்றது. இவற்றை ஆராய்ந்து சரி செய்து கொண்டால் நல்ல தமிழ் எழுதும் முறை கைவந்துவிடும். இதனை உருவாக்கியவர் நீச்சல்காரன் என்ற ராஜாராமன். இது உருவாதற்குக் காரணம் உண்டு. ராஜாராமனின் இணைய எழுத்துகளில் அதிக சந்திப்பிழை காணப்படுவதை ஓர் அன்பர் சுட்டிக் காட்ட அதன் விளைவாக பிழையற தமிழ் எழுத இவர் இம்மென்பொருளை உருவாக்கினார். இதற்கு நன்னூல், தொல்காப்பியம் காட்டும் புணர்ச்சி விதிகள் உதவி புரிந்துள்ளன. இம்மென்பொருளில் பொருளறிந்து திருத்தும் முறை இல்லாத காரணத்தால் நூறு விழுக்காடு சரி செய்யும் என்ற நம்பிக்கையைப் பெற இயலவில்லை.
மென்தமிழ்
Siragu pizhaithiruththi3
பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் உருவாக்கிய மென்தமிழ் சொல்லாளர் என்ற சொல் செயலி  தமிழைப் பிழையற எழுத உதவும் மென்பொருளாக விளங்குகிறது. இதனைக் கணினியில் நிறுவி, இதன்வழியாகவே உள்ளீடும் செய்யப்படவேண்டும். ஏறக்குறைய எம்.எஸ். வேர்டு சொல் செயலி போலவே இதனைத் தனிப்பட பயன்படுத்த இயலும்.   தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்(Tamil Keyboards), ஒருங்குறி எழுத்துருக்கள்(Unicode Fonts), குறியேற்ற மாற்றி(Encoding Converter) சொற்பிழை திருத்தி(Spell Checker), சந்திப்பிழை திருத்தி(Sandhi Checker), தமிழ்ச்சொல் சுட்டி (Tamil Word Suggester), அகராதிகள்(Dictionaries), அகரவரிசைப்படுத்தம் (Sorting), சொல்லடைவு (Indexing), துணைநூற்பட்டியல் கருவி (Bibliography), எண்<->எழுத்து மாற்றி(Number to Word Converter) போன்ற பல வசதிகளுடன் இச்செயலி அமைக்கப்பெற்றுள்ளது. இது தமிழக அரசின் பரிந்துரையைப் பெற்றுத் தற்போது அம்மா மென்பொருள் என்ற நிலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் தற்போதைய விலை ரூபாய் முன்னூறு. இதனைப் பெற்றுக் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம். இதன் வெற்றி என்பதும் தொன்னூறு விழுக்காட்டு அளவில் இருப்பதாக கணினித் தமிழ் அறிஞர்கள் குறிக்கின்றனர்.
 இவ்வகையில் பல பிழை திருத்திகள் தமிழ்க் கணினி உலகிற்கு வந்து கொண்டிருக்கின்றன. பயனீட்டாளர் தேவையை இவை ஓரளவு நிறைவு செய்கின்றன. இன்னும் இத்துறை வளரவேண்டு்ம். இலக்கணப் பிழைத் திருத்தி என்ற நிலையில் பிழை திருத்திகள் வர வேண்டும்.  அவற்றை எதிர்நோக்கிக் கணினிப் பயன்படுத்துனர் காத்திருக்கின்றனர்.